பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

ஒளவையார்

எளியன்' என்று இகழன்மின் ! அவனோடு போரிட்டு யாமும் வெல்வோம் என்று எண்ணன்மின்! உங்கள் நாடும் ஊரும் உங்களுக்கே உரித்தாக விரும்பின், அவன் வேண்டும் திறைகொடுத்து உய்ம்மின்! மறுப்பின் அவன் விடான்; இவ்வாறு நான் கூறுவன கேட்டு நடவீராயின், நீங்கள், உங்கள் உரிமை மகளிரைப் பிரிந்து உயர்ந்தோர் உலகம் செல்வது உறுதி! ஆதலின் களம்புகல் கனவிலும் கருதன்மின்!"

இவ்வாறு, அவன் பகைவர்க்கு அறிவுரை கூறிப், போர் நிகழாவண்ணம் முயன்ற ஒளவையார் அவ் வறிவுரையினை அதியமானுக்கும் கூறத்தவறினால்லர். "புலியொன்று, சீறி எழுந்தக்கால், அதை எதிர்த்துத் தாக்கவல்ல மானைக் கண்டார் யாரும் இலர்; செஞ்ஞாயிறு சிவந்து தோன்றிய பின்னரும், இருள் நீங்காது அதன்முன் நிற்பதுண்டோ? இல்லேயன்றே! பாரும் அச்சும் ஒன்றோடொன்று பொருந்தி உராயுமாறு, மிக்க பாரம் ஏற்றப்பட்ட வண்டி மணலின்கண் ஆழப்புதைந்த வழியும், அப் பாரம் கண்டு. சிறிதும் கலங்காது, தன்கால்பட்டு மணல் பரக்கவும், கல் பிளக்கவும் நடக்கவல்ல. எருதிற்குப் போதற்கரிய, வழியிது. எனக் கூறத்தக்க வழியெதையும் காட்டல் இயலாது ; அதைப்போன்றே, அரும்போர்வல்ல அதிய! நீ போர்க்களம் நோக்கிப் புறப்படின், நின்னை எதிர்த்துத் தாக்கவல்ல வீரரும் உளரோ? இல்லையன்றே? ஆதலின் களம்புகல் கருதற்க!"

"மறப்புலி உடலின் மாங்கணம் உளவோ?
மருளின் விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்?
அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய
அரிமணல் ஞெமரக், கல்பக, நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?
எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை,