பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையாரால் பாடப்பெற்றோர்

71

போரில் புறமுதுகுகாட்டி ஓடி உய்யுமாறு, அப் பகைவருள் ஒருவரையும் விடாது அனைவரையும் கொன்று குவித்தான் அதியமான்; எனினும், அப் பெரும் போரில், அவன் பகைவர் ஏவிய அம்பொன்றுபட்டு, அவன் மிடற்றில் புண் ஒன்று உண்டாகிவிட்டது; அப் புண்ணைக் காணக் காண, அதியமான், அடிபட்ட புலியெனச் சினந்து சீறி விழுவானாயினன்; எதிர்க்கும் பகைவர் ஒருவரும் இலராகவும், அவன் ஏந்திய வேலைக் கையினின்றும் கீழே வைத்தானல்லன்; காலில் கட்டிய வீரக்கழலையும் அவிழ்த்தானல்லன், வியர்வை வழியும் மெய்யும், சினத்தால், சிவந்த கண்ணும் உடையனாய்ப் போர்க்கோலமே கொண்டு விளங்குவானாயினன்.

அதியமானின் அச் சினநிலை, அவன் பகைவர்க்கும் அவர் தம் நாட்டிற்கும் யாது கேட்டை விளக்குமோ என அஞ்சினர் ஒளவையார் அதியமானை அணுகி, "அதியர் கோவே! விழுப்புண் பெற்றோம் என வீறுகொண்டு விரைந்து செல்கின்றனையே நீ, அங்குச்சென்று யாரொடு போரிடுவாய்? நின்னொடு போரிட அங்கே யார் உள்ளார்? நின் தூசிப்படைக்கு ஆற்றாது, தோற்று ஓடிப் பிழைத்தார் யாரேனும் இருப்பின் அன்றே, அவர்களைத் தேடிப் பிடித்தாவது போரிடல் இயலும்? நின்னால் புண்பெறாது பிழைத்து ஓடினார் அவருள் ஒருவரும் இலர்; நீ ஒருவன் மட்டுமே புண்பெற்றனை என நினையாதே; நின் பகைவர் அனைவரும், ஒருவர் விடாமல் நின் படைபட்டுப் புண் பெற்றவரே; நீயாவது புண்பெற்றும் இறவாது பிழைத்துள்ளாய்; ஆனால், புண்பெற்றுப் பிழைத்தார் நின் பகைவருள் ஒருவரும் இலர்; அவர்களனைவரும் நின் அம்பேறுண்டு அழிந்தே போயினர்; ஆதலின், ஆறுக நின் சினம்! அடங்குக நின் ஆத்திரம் தணிக நின் போர் வெறி" என்றுகூறி அவன் சினம் மாற்றுவராயினர்.

பகை வளர்தல் அதியமானுக்கு ஆபத்தாம் என்பதறிந்தே, அப் பகை வளராவண்ணம், ஒளவையார் எவ்வளவோ முயன்றார் எனினும் முடியவில்லை; முடிவில்