பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

ஒளவையார்

ஒன்றுதான், அக்கால நாடுகளுக்குள்ளே, நாகரிகத்தின் நடுநாயகமாய் விளங்கும் என்பது தெளிவு.

கல்வியும் செல்வமும் சிறக்கப்பெற்ற நாட்டில், செல்வர் சொல்வழி கல்வியாளர் செல்லுதல் இன்றி, கல்வியாளர் காட்டிய வழியே செல்வம் படைத்தோர் செல்லுதல் வேண்டும். அப்பொழுதுதான், அந்நாடு நல்வாழ்வின் இருப்பிடமாய் அமையும். கண்ணும் காதும் முதலாயின, ஒன்றன் நன்மை தீமைகளைப் பிரித்தறியும் உணர்வுடைய அறிகருவிகளாம்; கையும் காலும் முதலாயின. அவ்வுணர்வு அற்றுத் தொழிலாற்றுவதற்கென்றே தோன்றிய தொழிற் கருவிகளாம். கண்ணும் காதும் முதலாய அறிகருவிகள் அறிவித்தவாறே, கையும் காலும் ஆகிய தொழிற்கருவிகள் தொழில் ஆற்றினால்தான் உடலிற்கு ஊறு நேராது. அவ்வாறின்றிக் கையும் காலும் செய்யும் அவ்வளவு தொழிலையும் பார்த்துக் கொண்டிருக்கவே, கண்ணும் காதும் உள்ளன என்று கொண்டு இயங்குவதாயின், உடல் அழிவது உறுதி ! உறுதி முக்காலும் உறுதி சென்ற விடத்தால் செலவிடாது தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பதன்றோஅறிவு. இவ்வாறே நாட்டின் நல்வாழ்வு நடைபெற வேண்டுமாயின், ஏவும் வினைமுதல் கல்வியாளராகவும், இயற்றும் வினைமுதல் செல்வராகவும் அமைதல் வேண்டும். நம் தமிழகம், பண்டு பெருமைக்குரிய நாடாக விளங்கிற்று என்றால், அதற்குக் காரணம், அக்காலத்தில் அறிவன அறிந்த அறிவுடையோராய புலவர் சொல்வழி, அக்கால அரசர்களும், பிறசெல்வர்களும் பின்பற்றி நடந்தனர் என்பதே. ஆகவே, ஒரு நாடு வாழ்வதும், தாழ்வதும் அந்நாட்டுச் சான்றோர் வாழ்வதாலும் தாழ்வதாலுமே யாம் என்பது தெளிவு. "எவ்வழி நல்லவர் ஆடவர்; அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்றார் ஒளவையார். சான்றோர் பலர்யான் வாழும் ஊரே" என்றார் பிசிராந்தைப் பெருந்தகையார். “வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாகலான" என்றார் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர். 'தக்காரும், தாழ்விலாச்