பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோற்றுவாய்

3

செல்வரும் சேர்வது நாடு;" "பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்; அதுவின்றேல், மண்புக்கு மாய்வது மன்” என்ருர் திருவள்ளுவர்.

இவ்வுண்மையை உணர்ந்தனர் அக்காலத் தமிழ்நாட்டு அறிஞரும், அரசரும்; ஆகவேதான் அக்கால அறிஞர்கள் தம் வயிற்றுப்பாட்டிற்கு வழிகாண்பதே வாழ்க்கை; அதற்காகப் பிறரைப் பாடிப் பிழைப்பதே தம்தொழில் என்பதை மறந்து, தவறு கண்டவழி, அத் தவறு செய்தான் அந் நாடாளும் அரசனே யெனினும், அவன் அரசன்; தமக்கு வேண்டும் பொன்னும் பொருளும் அளித்துப் புரப்பவன்; ஆகவே, அவனேக் கடுஞ்சொல் கூறிக் கண்டிப்பதா என எண்ணாது, இடித்துக்கூறித் திருத்துவதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். அரசரும், அவர்கள் அண்டிப்பிழைக்க வந்தவரேயன்றி, அறிவூட்ட வந்தவரன்று என்று கொள்ளாது, அவர் அறிவிற்கு அஞ்சி, அவர் ஆட்டியவாறு ஆளுவதே அரசர்க்கு அழகு எனக் கொண்டு வாழ்ந்தனர்.

புலவர் வழிகாட்ட, அவ்வழியே அரசர்கள் சென்ற காரணத்தால்தான், செந்தமிழ்நாடு, சீரும் சிறப்பும், செழிக்கப், பாரோர்போற்றும் பெருநிலையுற்றுத் திகழ்ந்தது. பாடல் புனைவது ஒன்றே பாவலர் தொழில் என்று கருதி அடங்கியவர்கள் அல்லர் அப்புலவர்கள். அரசர்கள்பால் சென்று அறிவூட்டும் பணியினை மேற்கொண்ட அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கான வேறு தொழில்களையும் மேற்கொண்டேயிருந்தனர். இளந்தச்சனார், பெருந்தச்சனார், பொற்கொல்லன் வெண்ணாகனார், இளம் பொன் வணிகனார், அறுவை வாணிகன் இளவேட்டனார், கூலவாணிகன் சாத்தனார், மருத்துவன் தாமோதரனார், மதுரைக் கணக்காயனார் என அப்புலவர்களுக்கு வழங்கும் இப்பெயர்களே அவ்வுண்மையை மெய்ப்பித்தல் காண்க. பாடிப் பிழைப்பதையே பிழைப்பிற்காம் வழியெனக் கொள்ளாமல், தமக்கென ஒரு தொழிலை வரைந்து கொண்டு வாழ்வு நடாத்தியதோடு, காவலர்க்குத் துணை