பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4 வள்ளல்கள்

அருந்திறன் கடவுள் காக்கும், உயர்சிமைப் பெருங்கல் நாடன் பேகனும், திருந்துமொழி மோசி பாடிய ஆயும், ஆர்வமுற்று உள்ளி வருநர் உலைவு நனிதீரத் தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக் கொள்ளார் ஓட்டிய நள்ளியும், என வாங்கு எழுவர் மாய்ந்த பின்றை." (புறம் : கடுஅ)

- - * எனப் பெருஞ்சித்திரனாரும், அவ்வெழுவரையும் எடுத் தோதிப் பாராட்டியிருத்தலின், சங்ககால வள்ளல்கள் என வாழ்த்தப் பெறுவோர் அவ்வெழுவரே ஆவர். ஆகவே, அவ்வள்ளல்கள் எழுவர் வரலாற்றினை, அவ ரைப் பாடிய புலவர்களின் பாக்கள் துணைகொண்டு இயன்ற அளவு எடுத்துரைக்கிறது இந்நூல்; இவ்வெழுவர் வரலாற்றோடு, ஓய்மானாட்டு நல்லியக்கோடன், குமணன் ஆக இருவர் வரலாறும் உடன் உரைக்கப்படுகிறது; இவ் விருவரும், வள்ளல்கள் வரிசையில் வைத்து வாழ்த்தப் பெறவில்லையெனினும், அவ்வெழுவர் அளித்த கொடைப் பொருள் அனைத்தையும் ஒருவனே அளித்தவன் எனவும், அவ்வெழுவரும் மறைந்த பின்னர், அவரேபோல் கொடைத் தொழிலாற்றிய கோன் எனவும் முறையே பாராட்டப் பெறுதலின், அவ்விருவர் வரலாறும் ஈண்டே உரைக்கப்படு கிறது.

"எழுவர் பூண்ட ஈகைச் செந்துகம் 
 விரிகடல் வேலி வியலகம் விளங்க 
 ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள்."
                      (சிறுபாண் : ககஉ-கரு) 
 "எழுவர் மாய்ந்த பின்றை, அழிவரப்
  பாடி வருநரும், பிறரும் கூடி
  இரந்தோர் அற்றம் தீர்க்கு என, விரைந்திவண் 
  உள்ளி வந்தனென்." - (புறம் : கருஅ).

என, அவ்விருவரையும் பாராட்டிக் கூறுதலறிக.