பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டே முகவுரை இலக்கிய வரலாற்றிலிருந்து, பெரிய நூல்களாகிய காப்பியங்களும், சிறிய நூல்களாகிய பிரபந்தங்களும் மிகப் பழங்கால முதற்கொண்டே புலவர் பெருமக்களால் பாடப் பெற்று வந்திருப்பதை உணரலாம். புலவர்கள் இளமைக்காலத்தே கவிபாடப் புகும்போது தனிப்பாடல் களையும் சிறிய நூல்களையும் பாடுவது இயல்பு. பெரிய நூல்களைப் பாடாமல் பிரபந்தங்களைமட்டும் பாடிய புலவர்களும் இருக்கிரு.ர்கள். பெரிய நூல்களைப் பாடிய புலவர் சிலர் இயற்றிய சிறு பனுவல்கள் இப்போது கிடைக்காமல் இருக்கலாம். அதனல் அவர்கள் சிறிய நூல்களைப் பாடவில்லை என்று சொல்ல இயலாது; அவர்கள் இயற்றிய நூல்கள் மறைந்து போயிருக்கும். பிரபந்தங்கள் சங்ககாலத்தில் வாழ்ந்த புலவர்களிற் பலர் பாடிய பாடல்கள் கிடைக்கின்றனவே யன்றி, அவர்கள் பாடிய பெரும்பனுவல்கள் கிடைக்கவில்லை. புலவர்கள் பாடிய தனிப்பாடல்கள் அளவிறந்தன வாக இருத்தல்வேண்டும். அடுத்தபடியாக அவர்கள் பாடிய சிறிய நூல்கள், இப்போது பிரபந்தங்கள் என்று சொல்லும் வகையான நூல்களாக இருக்கலாம். தொடர்நிலைச் செய்யுட்கள் அல்லது காப்பியங்கள் அவற்றினும் குறைவாகவே இருக்கும். இது பொது இயல்பு. சென்ற நூற்ருண்டில் வாழ்த்த திரிசிரபுர மகாவித்துவான் மீட்ைசி சுந்தரம் பிள்ளையவர்கள் பல புராணங்களாகிய காப்பியங் களையும் பல பிரபந்தங்களையும் இயற்றியுள்ளார்கள். அவருக்கு முன் வாழ்ந்த சிவப்பிரகாசர், சிவஞான முனிவர், கச்சியப்ப முனிவர் முதலியவர்களும் அவ்வாறே புராணங்களும் பிரபந்தங்களும் இயற்றி யிருக்கிரு.ர்கள். குமரகுருபரரும், பிள்ளைப் பெருமாளையங்காரும் புராணங்கள் இயற்றவில்லை; பிரபந்தங்களை இயற்றினர். மன்னர்களையும், வள்ளல்களையும், ஆசிரியர்களையும், கடவுளரையும் புகழ்ந்து பாடிய பிரபந்தங்கள் தமிழில் நூற்றுக்கணக்கில் உள்ளன. பிரபந்தங்கள் இத்தனை என்ற வரையறை முன்பு இருந்ததாகத் தெரிய வில்லை. பிற்காலத்தில் தொண்ணுாற்ருறு வகைப் பிரபந்தங்கள் என்ற கணக்குச் சில இடங்களில் காணப்படுகிறது.