பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



முகவுரை


இவ்வண்ணம் திருவாவடுதுறை ஆதீன மகாசந்நிதானம் அவர்கள் அருளாலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆதரவாலும், பேராசிரியப் பெருந்தகை உயர்திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களின் துணையாலும் இப்பணி நிறைவெய்தி ஒரு பகுதி வெளிவருகிறது.

தனித்தமிழ்ப்பகுதிப் பேராசிரியர், பண்டித வித்துவான், முத்தமிழ் வித்தகர், உயர்திரு லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள் தம் பகுதி மாணவர் சிலரைத் தந்து விரைவில் முடிய ஊக்கிவந்தார்கள்.

இதனைப்பற்றி விரிவான விளக்கங்களையும், இன்றியமையாத குறிப்புக் களையும் முழு நன்றியையும் முற்றும் நிறைவெய்தியபின் தெரிவித்துக்கொள்வேன். இப்பணி பல்கலைக்கழகம்போன்ற நிலையங்கள் பல பேரறிஞர்களின் உழைப்பைப் பயன்படுத்திப் பல ஆண்டுகள் செய்யத்தக்கது என்பதை அறிஞர்கள் நன்கு அறிவார்கள். தனிமனிதன் ஒருவன் தலையாய மாணாக்கர் சிலருடைய உதவிகொண்டு செய்து முடிக்கத் தளராத உணர்வையும் ஊக்கத்தையும் தந்தது ஸ்ரீ ஞானமா நடராசப்பெருமான் திருவருள் ஒன்றே என்பதைப் பல்லாயிரமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.

1924-ம் ஆண்டு ஜூலை மாதம் என்னை ஸ்ரீ மீனாட்சி தமிழ்க்காலேஜில் மாணவனாகச் சேர்த்து, மகாமகோபாத்யாய உ. வே. சாமிநாத ஐயர் அவர்களின் அன்புக்குரிய மாணவனாகச் செய்தளித்து, ஸ்ரீ மீனாட்சி தமிழ்க்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் நியமித்த திரு. அண்ணாமலை அரசர் அவர்களுடைய பெரிய உள்ளமே இக்களஞ்சியம் கட்ட உதவி செய்தது. தமிழ்த் தாத்தாவும் அடியேனுடைய ஞானந்தந்தையுமாகிய மகாமகோபாத்யாய ஐயர் அவர்கள் அவ்வப்போது இத்துறையில் பயிற்றிவந்த பழக்கங்களே இக்களஞ்சியம் சேர்க்க உபாயமாக அமைந்தது.

கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டு முதல் இன்றுவரையில் - என்றும் செந்தமிழைச் சொல்லாலும் பொருளாலும், ஆடையாலும் அணிகளாலும் வளர்த்துவருகின்ற திருவாவடுதுறை ஆதீனமே இக்களஞ்சியம் எழுப்புவ தற்குச் சாரமாக இருந்து மேன்மேலும் எழுப்புகிறது. ஸ்ரீ-ல-ஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் இக்களஞ்சியத்தின் பாதுகாவலராயிருந்து, அறிஞர் அனைவருக்கும் பயன்படச்செய்கின்றார்கள்.

இங்ஙனம் உருவாகிப் பயன் தந்து திருவளிக்கும் சொற்களஞ்சியம் ஏனைய பகுதியும் விரைவில் வெளிவந்து தமிழுலகிற்குப் பயன் தருமென்று தெரிவித்துக்கொள்கிறேன்.

பெரிய முயற்சியில் சிறிய பிழைகள் பல இருக்கத்தான் செய்யும். இதனைக் காணும் அறிஞர் பெருமக்கள் பிழைகளையும் இதற்கு உதவியான பல கருத்துக்களையும் தெரிவிப்பார்களாயின் பின் தொடர்ந்து நடைபெறும் பணிக்குப் பெரிதும் உதவியாயிருக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இங்ஙனம்,

ஆதீன மகாவித்துவான்

ச. தண்டபாணி தேசிகர்.

திருவாவடுதுறை
5-3-65