பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சங்க இலக்கியத்

தலைவியிடம் கூறுகின்றாள்: “தலைவன் நினது நலம் பாராட்டக் குறியிடத்து வருகின்றான். எனினும் இதுகாறும் வாராது நம்மை நடுங்க வைத்தான். ஆதலின், நமது மனையருகில் வளைந்த குடமுழாப் போன்ற அடியினையுடைய கரிய புன்னையின் அடி மரத்தின் பின்னே சென்று மறைந்து கொள்வோம். அப்போது நம்மைக் காணானாகி அல்லல்படும் அவனது துன்பத்தையும் சிறிது காண்போம். வருவாயாக!” என்கிறாள்.

“திதலை அல்குல் நலம் பாராட்டிய
 வருமே தோழி வார்மணற் சேர்ப்பன்
 இற்பட வாங்கிய முழவு முதிர்புன்னை
 மாஅரை மறைகம் வம்மதி பானாள்
 பூவிரி கானல் புணர்குறி வந்துநம்
 மெல்லிணர் நறும் பொழிற் காணாதவன்
 அல்லல் அரும்படர் காண்கநாம் சிறிதே”
-நற். 307 : 4-10

மேலும் இதன் அடிமரத்தை. ‘நெடுங்காற்புன்னை’, கொடுங்காற் புன்னை, ‘முடத்தாள் புன்னை’ என்றும் கூறுவர்.

இம்மரத்தையும் இதன் கருங்கிளைகளில் தழைத்த இலைகளையும், முத்தன்ன வெள்ளிய அரும்புகளையும், அழகிய மலர்களையும் புலவர்கள் கண்டு உவந்து சுவைத்துப் பாடியுள்ளனர். இம்மரம் சாதாரண உயரமானது. இதன் அகன்ற தடித்த இலைகள் கரும் பச்சை நிறமாக இருக்கும். அதனால், மரமே நீல நிறமாகக் காணப்படும். இதன் நிழலில் மக்கள் அமர்ந்து இளைப்பாறுதல் உண்டு. இம்மரம் காதலர்கட்கு இரவுக்குறி பகற்குறி இடமாகவும். விளையாட்டயருமிடமாகவும் அமைந்துள்ளது. இம்மரத்திலும் இதன் பொதும்பரிலும் குருகு வந்து தங்கி இறை கொண்டு இருத்தலும் கூறப்படும்.

“நீல்நிறப் புன்னைக் கொழுநிழல் அசைஇ”-நற். 4 : 1-2

“நீல்நிறப் புன்னைத் தமிஒண் கைதை”-நற். 163 : 8

“அகல் இலைப்புன்னை புகர் இல் நீழல்
 பகலே எம்மோடு ஆடி”
-அகநா. 370 : 2-7

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . வீஉகப்
 புன்னை பூத்த இன்நிழல் உயர்கரை”
-நற் 91 : 1-2

“ஓங்கு இரும்புன்னை வரிநிழல் இருந்து
 தேங்கமழ் தேறல் கிளையொடு மாந்தி”
-நற். 388 : 7-8