பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

சங்க இலக்கியத்

அதனால், இப்புன்னை எங்கள் தங்கை ஆவாள். தங்கை இருக்க அம்மாவோ! நாணுதும்! இப்புன்னையடியிலா தலைவியுடன் குலவுதல் கூடும்? நினைக்கவே எனக்கு நாணமாக உள்ளது. நீ நல்குவையாயின், வேறு தழைத்த மரத்து நிழல் இல்லையோ?” என்று நயம்படவுரைத்துப் பகற்குறி மறுக்கின்றாள்.

விளையாடு ஆயமோடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்த்தது
நும்மினும் சிறந்தது நுவ்வை யாகுமென்று
அன்னை கூறினள், புன்னையது நலனே
அம்ம! காணுதும் நும்மொடு நகையே;
விருந்தின் பாணர் விளர்இசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்கு நீர்த்
துறைகெழு கொண்க! நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே
-நற். 172

விளர்-மெல்லிய, நரலும்-ஒலிக்கும்.

இப்புன்னை மரத் தொடர்பான வரலாற்று நிகழ்ச்சி ஒன்று அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது.


திதியன் என்னும் குறுநில மன்னன் குறுக்கை என்ற நகரில் இருந்து ஆண்டு வந்தான். அவனுடைய காவல் மரம் புன்னை. திதியனோடு, அன்னி என்னும் குறுநில மன்னன் பகை கொண்டான். திதியனுடைய காவல் மரமாம் புன்னையை வெட்டி வீழ்த்தி, அவனை அவலப்படுத்த எண்ணினான். இதனையறிந்த அன்னியின் அரிய நண்பன் என்னி என்பான், அன்னியைத் தடுத்தான். அன்னி, என்னியின் நல்லுரையைக் கேளாது குறுக்கை நகரைத் தாக்கினான். திதியனது காவல் மரமாகிய புன்னையை வெட்டி வீழ்த்தினான். அதனைக் கண்ட அன்னியைச் சேர்ந்த பாணர் இசை முழக்கி, ஆரவாரம் செய்தனர். (அகநா: 45 : 9-12) தனது காவல் மரம் வெட்டப்பட்டதைப் பொறாத திதியன் வெகுண்டு போரிட்டு, அன்னியை வீழ்த்தினான். ஆயினும், அவனுடைய புன்னை மரம் அன்னியால் வீழ்த்தப்பட்டு அவலம் எய்தியது. இங்ஙனம் துன்பியல் நிகழ்ச்சிக்கு ஆளாகிய புன்னை மரம் புறத்திணையியல் வரலாற்றைப் பெற்றது. இந்நிகழ்ச்சியை அகத்திணையியலுக்கு ஏற்றிய கயமனாரின் திறன் போற்றுதற்குரியது.