பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

சங்க இலக்கியத்

“இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்”-பெரும். 27

தீக்காடாக மலர்ந்திருக்கும் இலவ மரத்தின் மேல் ஒரு மயில் ஏறியமர்ந்தது. இக்காட்சி நெருப்பில் இறங்கிய மகளிரை ஒத்தது என்பர்.

“. . . . . . . . . . . . . . . . முள்ளுடை
 இலவம் ஏறிய கலவ மஞ்ஞை
 எரிபுகு மகளிர் எய்க்கும்”
-ஐங். மிகை : 3

இவ்வாறு கூறப்படுதலை எண்ணின், அக்காலத்தில் கணவரை இழந்த மகளிர் எரிபுகுவர் என்று அறியக் கிடக்கிறது.

புலமையில் மேம்பட்டுப் பிற்காலத்தில் வாழ்ந்த, ஆத்திசூடி பாடிய அவ்வையார் கூறும் இலவ[1] மரத்தில் பஞ்சு மிக மென்மையுடன், பளபளப்பும் உடையது. இதனையே மெத்தைகளுக்கும் தலையணைகட்கும் பயன்படுத்துவர்.

இந்த இலவ மரமும் நெடிதுயர்ந்து வளர்வது; மேற்பகுதியில் கிளைகள் நாற்புறமும் பரந்து உண்டாகும். முதிராத இதன் அடி மரத்தில் முட்கள் இருக்கும். பின்னர் இம்முட்கள் உதிர்ந்து விடும். இதன் மலர்கள் வெளிர் மஞ்சள் நிறமானவை. காய்கள் பசுமையானவை. முதிர்ந்த இக்காய்கள் மங்கலான மஞ்சள் நிறமாய் இருக்கும். இதுவும் மலைப்பாங்கில் வளருமியல்பிற்று. கோயில்களின் புறத்தே பந்தல் போடுவதற்கு இவை வரிசையாக வளர்க்கப்படும். இதனைத் தாவரவியலார் ‘எரியோடென்ட்ரான் பென்டான்ரம்’ (Eriodendron pentrandrum, Kurz.) என்று கூறுவர்.

இலவம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : தாலமிபுளோரே – மால்வேலீஸ் – அகவிதழ் பிரிந்தவை.
 

  1. “இலவம் பஞ்சில் துயில்”-ஆத்திசூடி - 26