பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



161

நல்லார் ‘நாரத்தைப்பூ’ என்றார். அருஞ்சொல் உரையாசிரியர் ‘நாரத்து’ என்றார். மலையாளத்தார் இதனை நாரங்கம் என்பர்.

‘நரந்தை’ என்னும் பெயரில் ஒரு வகைப் புல்லும் உண்டு. அது நறுமணம் உள்ளது. அது நரந்தம் என்றும் கூறப்படும்.

“நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி”-புறநா: 132 : 4

இப்புல்லைக் கவரிமான் விரும்பித் தின்னும். இதன் மணத்திலும், சுவையிலும் மனம் வைத்த மான், கனவிலும் அப்புல்லைக் கண்டு மகிழுமாம்.

“கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி
 பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்”

-பதிற்: 11 : 21-22


இப்புல்லிலிருந்து வடித்தெடுக்கப்படும் பனிநீரை மலர் மாலைகளில் தெளித்து மணமேற்றுவர்.

“நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்”

இங்கு நரந்தம் என்பதற்கு ‘நரந்தம்புல்’ என்று உரை கூறுவர். ஆங்கிலத்தில் இப்புல்லை ‘லெமன் கிராஸ்’ (Lemon grass) என்றழைப்பர். ஆகவே நரந்தம் என்ற சொல்லுக்கு, இடத்திற்கேற்ப உரையாசிரியர்கள் இப்புல்லைக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ‘நரந்தம்’ என்பதற்குக் ‘கத்தூரி’ என்ற பொருளும் உண்டு. (மதுரைக் : 553 நச் : உரை). மற்று, நரந்தம் ஒரு சிறு மரம். சோலைகளில் இம்மரம் வளர்கிறது. பெரிதும் இம்மரம் வேங்கை மரத்தின் பக்கத்தில் வளர்வதாகக் குறிப்பிடப்படுகிறது. செறிந்த மரங்களைக் கொண்ட காவில், வேங்கை மரத்து மலர்கள் உதிர்ந்து கிடக்கின்றன. அவற்றுடன் நரந்தம்பூவும் உதிர்ந்து பரவிக் கிடக்கும்.

“புலிக்கேழ் உற்ற பூவிடைப் பெருஞ்சினை
 நரந்த நறும்பூ நாள்மலர் உதிர”
-அகநா. 141 : 25-26

“நனிஇரும் சோலை நரந்தம் தாஅய்
 ஒளிர்சினை வேங்கை விரிந்தஇணர் உதிரலொடு”

-பரிபா: 7 : 11-12


“தான் காதலிப்பார்க்கு மாலை சூட்டுதலான், நரந்தம்பூ நாறும் கைகளை உடையவன்” அதியமான் நெடுமான் அஞ்சி.

 

73–11