பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/193

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

177

‘முடக்கொற்றான்’ எனப்படும். இது முடக்கத்தான் என மருவி வழங்கப்படுகிறது. மருத்துவ நூலார் இதனை ‘முடக்குத் தீர்த்தான்’ என்று கூறி, இதனை முடக்கு வாதத்தைத் தடுத்தற்குரிய மூலிகை என்பர். முடக்கு வாதத்திற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

இக்கொடியில் கூட்டிலைகள் இருக்கும். இதன் சிற்றிலைகள் மிகச் சிறியவை. கூட்டிலையின் கோணத்தில் இதன் மஞ்சரி தோன்றும். மலர்கள் சிறியவை. இவற்றைத் தனியாகச் சூடுதல் இயலாது. ஆகவே, இக்கொடியைத் துண்டாக்கி, இதன் இலையையும் மஞ்சரியையும் (மலர்) சேர்த்துக் கண்ணியாகத் தொடுத்துச் சூடிக் கொள்வார் என்பர் இடைக்குன்றூர்க் கிழார்.

“நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து
 செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி”
-புறநா:76:5-6}}

கார்நாற்பதில் (31) கண்ணங்கூத்தனார் கண்ட காட்சியை அடியில் வருமாறு, கோவை.இளஞ்சேரனார் குறிப்பிடுகின்றார்.[1]

“ஒரு கடா எருமை அழகானது; மழைநீர் ததும்பும் குளத்தில் நீராடிக் கரை ஏறியது. திடீரென்று வீர நடை போட்டது. காரணம் என்ன? கரையில் களைந்த கொடி ஒன்றை யாரோ வீசி எறிந்துள்ளனர். பூவோடு கூடிய அக்கொடி இவ்வெருமையின் தலையில் வீழ்ந்தது; கொம்பில் சிக்கிக் கொண்டது. இக்கொடிப் பூ, தலையில் எறியப்பட்ட உடனேயே இதற்கு வீரம் தலைக்கேறி விட்டதாம். போருக்குச் செல்லும் வீரனது வீர உணர்வு கொப்பளித்துச் செம்மாந்து விட்டதாம்.

உழிஞை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : ஜெரானியேலிஸ்
தாவரக் குடும்பம் : சாப்பிண்டேசி
தாவரப் பேரினப் பெயர் : கார்டியோஸ்பர்மம் (Cardiospermum)



  1. இலக்கியம் ஒரு பூக்காடு : பக்: 288