பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/196

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

தேமா
மாஞ்சிபெரா இன்டிகா (Mangifera indica,Linn.)

கபிலர் மாமரத்தைத் ‘தேமா’ என்று குறிப்பிடுகின்றார் (குறிஞ். 64). தேமாங்கனி வாழை, பலா, மா முதலிய முக்கனிகளுள் ஒன்றாகும். தேமா மரம் ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளாக இந்திய நாட்டில் பயிரிடப்படுகிறது என்கிறார் ஆல்பர்ட் எப். ஹில் (Albert F. Hill) என்பார்.

சங்க இலக்கியப் பெயர் : தேமா, மா
பிற்கால இலக்கியப் பெயர் : மா
உலக வழக்குப் பெயர் : மாமரம்
தாவரப் பெயர் : மாஞ்சிபெரா இன்டிகா
(Mangifera indica,Linn.)

தேமா இலக்கியம்

சங்கத் தமிழிலக்கியத்தில் தலை சிறந்ததெனக் கருதப்படும் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் தேமா, கலிமா என்று இரு மாமலர்களைக் கூறுகின்றார்.

“செங்கொடுவேரி தேமா மணிச்சிகை”-குறிஞ். 64
“கரந்தை குளவி கடிகமழ் கலிமா”-குறிஞ். 76

இவ்வடிகளிலுள்ள ‘மா’விற்கு நச்சினார்க்கினியர் முறையே ‘தேமாம்பூ’ என்றும், விரைகமழத் தழைத்த மாம்பூ என்றும் உரைகண்டார். இவையிரண்டும் தேமாம்பூவினையே குறிக்கும் எனல் பொருந்தாது. என்னை? கபிலர் கூறியது கூறார் ஆகலின் என்க. ஆகவே, ‘தேமா’ என்பது இனிய மாவினையும், கலிமா என்பது புளிமாவினையும் குறித்தல் கூடும். எனினும் இது