பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

சங்க இலக்கியத்

கலியாண முருங்கையாகிய கவிரிலும் நுண்ணிய முள் காணப் படுகின்றது. பூக்கள் இரண்டிலும் நல்ல செந்நிறமாயினும், மலர் அமைப்பில், முருக்கும், முள்முருக்கும் வேறுபட்டவை. தாவரவியலில், இரண்டும் ஒரே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவையாயினும், இவை இரு பேரினங்களைச் சேர்ந்தவை. முருக்கு மலரைப் புலவர்கள் சண்டைச் சேவலின் பிடரி சிலிர்த்தது போன்றதென்பர். கவிரின் பூ, சேவலின் நெற்றியென்னும், கொண்டையை ஒத்தது என்பர்.

“தளிர்புரை கொடிற்றின் செறிமயிர் எருத்தின்
 கதிர்த்த சென்னிக் கவிர்ப்பூ வன்ன
 நெற்றிச் சேவல் .... .... .... ....”
-அகம் . 367 : 10-12

“கவிர்ப்பூ நெற்றிச் சேவலின் .... .... ...”-புறநா 325 : 6

பிற்கால இலக்கியங்களில் முருக்கின் இதழ், மகளிர் வாய்க்கு உவமையாகக் கூறப்பட்டிருப்பினும், பண்டைய இலக்கியத்தில் செவ்வாய் என வாய் நிறத்தளவிற்கு மட்டும் இதன் இதழ் கூறப்பட்டுள்ளது. கவிரின் இதழ், மகளிர் செவ்வாய் இதழிற்கு உவமையாகக் காட்டப்படுகின்றது.

“கவிர் இதழ் அன்ன காண்புஇன் செவ்வாய்”-அகநா. 3 : 15

“கார்அணி கூந்தல், கயல்கண், கவிர்இதழ்”-பரிபா. 22 : 28

“கரைநின் றுதிர்ந்த கவிர்இதழ்ச் செவ்வாய்”[1]

குமட்டூர்க் கண்ணனார், ‘கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி’ (பதிற். 11 : 21) என இம்முள்முருக்கு மலைப்பகுதியில் வளர்வதைக் கூறுகின்றார். இதனால் இதனைக் குறிஞ்சி நிலப்பூவென்பர். ஆகவே, இதுவும் முருக்கு போல வேனிற்காலத்தில் பூக்கும் இயல்பிற்று. சூடப்படாதது. இம்மலர் குறிஞ்சிப்பாட்டில் இடம் பெறவில்லை.

கவிரை உள்ளிட்ட இத்தாவரப் பேரினத்தில், 9 இனங்கள் இந்தியாவில் உள்ளதாக ஹூக்கரும், 4 இனங்கள் தமிழ் நாட்டில் உள்ளதாகக் காம்பிளும் கூறுவர். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=42 என, ராவ்.ஆர்.எஸ் (1945), அட்சிசன் (1974 சி), நந்தா (1962) முதலியோர் கூறுவர்.


  1. சிலப். 13 : 165