பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

209

செங்குன்றிமணிகளை விளைவிக்கும் செங்குன்றிச் செடியைப் போன்றது. வெண்குன்றி மணிகளைத் தரும் வெண்குன்றிச் செடி. இதன் மலர்கள் வெண்ணிறமானவை. இவையன்றி, கருங்குன்றி விளையும் குன்றிச் செடி ஒன்றுண்டு. பச்சை நிறமுடைய குன்றியுமுண்டு. இதன் மலர் செந்நிறமானது. இவையனைத்தும் ஏப்ரஸ் பிரிகடோரியஸ் என்றே பயிலப்படும்.

மணிச்சிகை

“செங்கொடு வேரி தேமா மணிச்சிகை”-குறிஞ். 64

என்றார் குறிஞ்சிக் கபிலர். ‘மணிச்சிகை’ என்பதற்குப் பொருள் கூறிய நச்சினார்க்கினியர், ‘செம்மணிப்பூ’ என்றார். சங்கச் செய்யுள்களில் இப்பெயர் வேறெங்கும் காணப்படவில்லை. பிற்கால அகரமுதலி [1] ஒன்று மட்டும் இதனைக் குன்றிமணி என்று கூறுகின்றது. குன்றிக்கொடியின் முதிர்ந்த பூங்கொத்தைப் போன்று, மலர்க் கொத்தின் மேல் உச்சியில் செம்மணியைப் பெற்றுள்ள மலரை உடைய தாவரம் எனக் கொள்வதல்லது வேறு விளக்கம் பெறுமாறில்லை. இப்போதைக்கு இதனைக் குன்றி என்றே கொள்ள வேண்டியுள்ளது. இதனால் இதனையும் ஏப்ரஸ் பிரிகடோரியஸ் (Abrus precatorius) என்று குறிப்பிடலாம்.


  1. அகரமுதலி
 

73-14