பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

221

நனை முற்றிய அரும்பின் புறவிதழ், பசிய நிறமாகும். இது முகையாம் போது அகவிதழில் செம்மை தோன்றும்.

“பாசரும்பு ஈன்ற செம்முகை முருக்கினை”-அகநா. 229 : 16

இதன் அரும்பினைப் புலியின் நகத்திற்கு உவமை கூறுவர். “முருக்கு அரும்பன்ன வள்ளுகிர் வயப்பிணவு”-அகநா. 362 : 5

மேலும், குருதிக் கறை படிந்த புலி நகத்தை இதன் அரும்பிற்கு உவமையாக்குவதோடு, இம்மரம் இளவேனிற் காலத்தில் பூக்கும் என்பர் ஒரு புலவர்.

“உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்
 எதிரி முருக்கு அரும்ப .... .... ....
 இன்பம் பயந்த இளவேனில்”

மேலும். இதன் குவிமுகையைச் செவ்வண்ணம் ஊட்டிய மகளிரின் கை நகத்திற்கு உவமித்தார் மற்றொரு புலவர்.

“குவிமுகை முருக்கின் கூர்நுனை வைஎயிற்று
 நகை முகமகளிர் ஊட்டுஉகிர் கடுக்கும்”

-அகநா 317 : 4-5


இதனுடைய முகை அவிழ்ந்தால், அகவிதழ்களின் செம்மை நிறம் விளங்கும். இதன் மலரைச் ‘செம்பூ முருக்கு’ என்றார் நெடுங்கண்ணனார் (குறுந். 156 : 2) என முன்னரே கூறினோம்.

செக்கச் சிவந்த இம்மலரின் செம்மையை, எரியின் செம்மையாகக் கூறுவர். விரிந்த அகவிதழ்கள் தீயின் நாக்குகளாகவும், சிற்றிதழ்கள் தீப்பிழம்புகளாகவும், மகரந்தங்கள் சிதறும் தீப்பொறிகளாகவும் கூறப்படும்.

“பொங்கழல் முருக்கின் ஒண்குரல்”[1]

 “எரிசிதறி விட்டன்ன ஈர்முருக்கு”[2]

முருக்க மரக் கிளையில் இதன் செவ்விய பூந்துணர் காணப்படும். இதனை ‘எரிமருள் பூஞ்சினை’ (அகநா. 41 : 3) என்பர் குன்றியனார். அழல் ஒத்துப் பூத்த முருக்க மரங்களைக் கொண்ட நீர்த்துறைக் கரை என்றார் கௌதமனார்:

 

  1. கே. நா: 277 : 16
  2. திணைமா. நூ : 64