பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/256

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

சங்க இலக்கியத்

“நல்நாள் வேங்கைவீ நற்களம் வரிப்பக
 கார்தலை மணந்த”
-அகநா. 133 : 4-5

“பைம்புதல் வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன
 நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே”
-அகநா. 2:15-17

பின்வரும் அகநானூற்றுப் பாடலில் ஒரு சுவையான சொற்றொடர் வேங்கை மலரும் காலத்தைக் குறிக்கும் தொடர்பில் உள்ளது. கார்காலம் தொடங்கு முன் வருவேன் எனறு சொல்லிச் சென்றவன், ‘கார் காலத்தை அறிவிக்க வேங்கை மலர்வதை எண்ணி நின்னை வரைந்து கொள்ள வருவான்’ என்று தோழி தலைவியிடம் கூறுகின்றாள்.

“வருமே தோழி நன்மலைநாடன்
 வேங்கை விரிவிடம் நோக்கி
 வீங்கிறை பணைத்தோள் வரைந்தனன் கொளற்கே”

-அகநா 232 : 6-7


இப்பாடலில் வரும் ‘வேங்கை விரிவிடம்’ என்ற சொற்றொடர் தொல்காப்பிய உரையாசிரியர்களைக் கவாந்துள்ளது. வேங்கை விரி இடம் என்பதில் இடம் என்பது வினை நிகழ் இடமன்று. சேனாவரையர் இதற்குக் ‘காலமாகிய இடம்’ என்றார் (தொல். சொல். 81-உரை). நச்சினார்க்கினியரும் ‘வேங்கை அலர்கின்ற காலத்தைப் பார்த்து’ என்று உரை கூறினார். இதனை இடமாகக் கொண்டால், இங்கு வதுவை மணம் நிகழும் என்று கொள்ள நேரும். வதுவை மணம் இல்லத்தே நிகழ்வதாகலின், இது பொருந்தாது. இதில் வரும் ‘வரைந்தனன் கொளற்கு’ என்றது. ‘வரைநது எனது தோளைத் தழுவிக் கொள்வதற்கு’ என்ற பொருளாகும். எனவே, வேங்கை மலரும் நாள், காலத் தொடக்கமாகி, அது திருமணத்திற்கு நாளை அறிவிக்கும் அறிவிப்பாகும் என்று கூறுவர் கோவை இளஞ்சேரனார்![1]

வேங்கை மரத்தின் கரிய நிறமுள்ள கிளைகளில் மஞ்சளும், மங்கிய செம்மையுமான நிறமுள்ள மலர்கள் கொத்தாகப் பூக்கும். பூக்கள் வரிப் புலியைப் போலத் தோன்றும். இதன் பூக்களைக் குறவர் மகளிர் கொய்து கூந்தலிற் சூடிக் கொள்வர். ‘வேங்கை மரம் மிக உயரமானது. அதன் மேல் ஏறிப் பூக்கொய்தல் அத்-


  1. இலக்கியம் ஒரு பூக்காடு பக். 413