பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/258

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

சங்க இலக்கியத்

கொய்வார்க்கு எளிதாகி நின்று பூக்கும் நாடன் என்றதனானே, தலைவன் நுகருங் காரணத்தானன்றி வந்து எதிர்ப்பட்டுப் புணர்ந்து நீங்குவான் எம்மை இறந்து பாடு செய்வியாது ஆற்றுவித்துப் போயினான் எனவும், அதனானே நாமும் உயிர் தாங்கியிருந்து பலரானும் அலைப்புண்ணா நின்றனம் வேங்கை மரம் போல எனவும், உள்ளத்தான் உவமங்கொள்ள வைத்தவாறு காண்க’.

ஆதலின் ஒரே குறுந்தொகைக்கு இரு பெரும் உரையாசிரியர்கள் இறைச்சிப் பொருளும், உள்ளுறை உவமப் பொருளும் கூறியுள்ளமை நுண்ணிதின் உணர்ந்து மகிழ்தற்பாலது. ஓங்கி வளர்ந்த வேங்கை மரத்தின் மேலேறிப் பூக்கொய்தல் உண்டெனினும், பூத்த வேங்கையின் அடியிலே நின்று கொண்டு மகளிர், “புலி, புலி” என்று பூசலிடுவதைப் புலவர் பெருமக்கள் கூறுவாறாயினர்.

“கருங்கால் வேங்கை இறுஞ்சினைப் பொங்கர்
 நறும்பூக் கொய்யும் பூசல்”
-மது. 296

“மன்ற வேங்கை மலர்பதம் நோக்கி
 ஏறாது இட்ட ஏமப்பூசல்”
-குறுந் 241 : 4-5

பூத்த வேங்கையைப் பார்த்துப் “புலி, புலி” என்று கூச்சலிடுகின்றாள் ஒருத்தி. ஊர் மனைகளில் இவ்வோலம் எட்டிற்று. ஆக்களை அடித்துச் செல்லப் புலி வந்ததென ஆடவர், வில்லும் கையுமாக ஓடோடி வந்தனர். புலியைக் காணவில்லை. கிலி கொண்ட குறமகளைக் கண்டு, “புலி எங்கே” என்று உசாவினர். அவள் “வேங்கைப்பூ வேண்டும்” என்றனள்.

“கிளர்ந்த வேங்கைச் சேண்நெடும் பொங்கர்ப்
 பொன்நேர்ப் புதுமலர் வேண்டிய குறமகள்
 இன்னா இசைய பூசல் பயிற்றலின்
 ஏகல் அடுக்கத்து இருள்அளைச் சிலம்பின்
 ஆகொள் வயப்புலி ஆகும் அஃதுஎனத்
 தம்மலை கெழுசீறூர் புலம்ப கல்லெனச்
 சிலையுடை இடத்தர் போதரும் நாடன்”
-அகநா 52: 2-8

மேலும் இப்பூசலைத் தங்கால் முடக்கொற்றனாரும், பெருங் கௌசிகனாரும் கூறுவதையுங் காண்போம்.

“ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி
 புலிபுலி என்னும் பூசல் தோன்ற”
-அகநா. 48 : 6-7