பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/259

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

243



“தலைநாள் பூத்த பொன்னிணர் வேங்கை
 மலைமார் இடூஉம் ஏமப்பூசல்”
-மலைப. 305-306

மலைபடுகடாத்தின் இச்சீரடிகட்கு உரை வகுத்த ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘முதல் நாளிலே பூத்த பொன் போலும் கொத்தினை உடைய வேங்கைப் பூவைச் சூடுதற்கு மகளிர் “புலி புலி” என்று கூப்பிடும் ஏமத்தை உடைய ஆரவாரமும் எனவும், ‘வேங்கை வளைந்து பூவைக் கொடுத்தலின் அச்சந்தீர்த்த பூசல்’ என்றார்’ எனவும் உரை கூறியுள்ளார்.

மகளிர், பூத்த வேங்கையினடியில் நின்று “புலி புலி” என்று பூசலிடும் போது அவர்கள் பூக்கொய்தற்கு வேங்கை மரம் தாழ்ந்து கொடுக்கும் என்ற பழங் கருத்தைச் சங்க நூல்களில் வரும் ‘ஏமப் பூசல்’ என்பதற்குப் பொருள் கூறும் வாயிலாக நச்சினார்க்கினியர் முதன் முதலாகக் கூறியுள்ளமை வியந்து போற்றுதற்குரித்து.

‘வேங்கை’ என்ற சொல் வேங்கை மரத்திற்கே உரியதென்பதையும், வேங்கை பூத்திருப்பதை வேங்கை மரம் புலியைப் பெற்றெடுத்ததாகவே கூறுவதையும் செங்கண்ணார் பாடலிற் காணலாம்.

“வேங்கையும் புலி ஈன்றன”-நற். 389 : 1

வேங்கை மலர்கள் குறவர் சிறு குடிலில் வரிவரியாக உதிர்ந்து படிந்திருக்கின்றன. அதனைப் பார்த்த ஒரு யானை, புலி என்று அஞ்சியதாம். (அகநா. 12 : 9-11)

வேங்கை மரத்தடியில் சற்று நீண்ட கரும்பாறைகள் கிடக்கின்றன. அவற்றின் மேல் வேங்கை இணர்கள் விழுந்து கிடக்கின்றன. இக்காட்சியைக் கபிலர் பாடுகிறார்.

“அரும்பு அற மலாந்த கருங்கால் வேங்கை
 மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
 இரும்புலி வரிப்புறங் கடுக்கும்”
-புறநா. 202 : 18-20

யானை வேங்கையின் தழையையும், பூவையும் உணவாகக் கொள்ளும். தான் உண்பதோடு நில்லாமல், தன் கன்றோடு பெண் யானையையும் தழுவி அழைத்துச் சென்று, வேங்கையின் பெரிய கிளையை முறித்து, அதில் பூத்த பொன் போன்ற பூங்கொத்துக்-