பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

பெருந்தண் சண்பகம்
மக்னோலியா கிராண்டிபுளோரா
(Magnolia grandiflora, Linn.)

பத்துப்பாட்டில் நக்கீரரும் கபிலரும், பரிபாடவில் நல்லந்துவனாரும் ‘பெருந்தண்சண்பகம்’ என்ற மலரைக் குறிப்பிடுகின்றனர். குறிஞ்சிப்பாட்டில் (75) கபிலர் ‘பெருந்தண்சண்பகம்’ என்று கூறுவதல்லால், சண்பக மலரைத் தனித்துரைக்கவில்லை.

மிகத் தண்ணிய உதகமண்டலத்திலும், கொடைக்கானலிலும், ஆறாயிரம் அடி உயரத்திற்கு மேல், ‘சண்பகம்’ என்று வளர்க்கப்படும் சிறுமரம் ஒன்றுண்டு. இதில் நறுமணமுள்ள மிகப் பெரிய மலர் பூக்கின்றது. இதனையே பெருந்தண்சண்பகம் என்று கொள்ளலாம் போலத் தோன்றுகிறது. ஆனால், இச்சிறுமரம் இவ்விடங்களில் வளர்க்கப்படுகின்றது. இது எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது புலனாகவில்லை.

சங்க இலக்கியப் பெயர் : பெருந்தண்சண்பகம்
உலக வழக்குப் பெயர் : சண்பகம்
தாவரப் பெயர் : மக்னோலியா கிராண்டிபுளோரா
(Magnolia grandiflora, Linn.)

பெருந்தண் சண்பகம் இலக்கியம்

மக்னோலியேசி என்னும் இத்தாவரக் குடும்பத்தில் மக்னோலியா (Magnolia) என்ற ஒரு பேரினமுண்டு. இதில் 4-5 சிற்றினங்கள் இந்தியாவில் வளர்கின்றன. ‘மக்னோலியா’ கிராண்டிபுளோரா (Magnolia grandiflora) என்ற சிறுமரம் குளிர்ச்சி மிக்க நீலகிரியிலும், கொடைக்கானல் மலைகளிலும் வளர்கின்றது. இம்மரம் 10-12 மீட்டர் உயரமானது. அடர்ந்து கிளைத்து வளர்வது. மிகப் பெரிய பசிய தனியிலைகளை (10"-14" x 5"-6") எப்பொழுதும் தாங்கி நிற்பது. வடஅமெரிக்காவில் தென் பகுதியில் நன்கு வளர்வது என்பர் காம்பிள். இதன் தனி