பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/293

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



277

அவன் வாராவழி ஆற்றொணாது அவலம் உறுதலும், ஒரோவழி அவன் கூறிய பருவத்திற்குள் வந்து அவளுடன் கூடியுறைதலும் ஆகிய இவை பற்றிய பண்டைத் தமிழ்ப் பாக்களில் கொன்றை பல படியாகப் பயிலப்படுகின்றது. இந்நாளில் வைகாசி, ஆனி மாதங்களிலேயே கொன்றை பூத்து விடுகின்றது. பூக்கள் நல்ல மஞ்சள் நிறமானவை; நீண்ட கொத்தாகப் பூக்கும் இயல்பு உடையவை. பூங்கொத்து மரத்தில் கீழ் நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும். இதனைத் ‘தூங்கினர்க் கொன்றை’ (குறிஞ். 86) என்று கபிலர் கூறுவர்.

“நீடுசுரி இணர சுடர்வீக் கொன்றை”-நற். 302

“வயங்கிணர்க் கொன்றை”-கலி. 102

“மெல்லிணர்க் கொன்றை”-கலி. 103

“முறியிணர்க் கொன்றை ”-முல்லைப். 94

“நள்ளிணர்க் கொன்றை”-அகநா. 197

“நீடிணர்க் கொன்றை”-அகநா. 384

என்றெல்லாம் வருவனவற்றைக் காண்க. மேலும் கொன்றை மரம் மலையிடத்தே பூத்திருப்பதைப் பார்க்கிறார் இளவேட்டனார் :

“பொன்தொடர்ந் தன்னதகைய நன்மலர்க் கொன்றை
 ஒள்ளிணர் கோடுதோறும் தூங்க”
-நற். 221 : 3-4

“பொற்காசினைத் தொங்க விட்டாற் போன்ற அழகினை உடைய நல்ல மலர்களுடன் கூடிய சரக்கொன்றையின் ஒள்ளிய பூங்கொத்துக்கள் அதன் கிளைகள் தோறும் தொங்குகின்றன” என்கின்றார்.

சங்கத் தமிழில் கொன்றை மலரைப் பொன் மலராகப் பேசும் மரபு மிகுந்து காணப்படுகின்றது. ‘கொன்றை நன்பொன்கால’ (முல்லைப் : 94) என்று கொன்றைப் பூ பொன்னின் ஒளியை வீசுவதாகக் கூறுவர். அதிலும் பொன்னின் மாற்றுப் பார்த்தவர் போல், ‘நன்பொன்’ என்றார். மேலும்,

“பொன் கொன்றை”- பொருந: 201

“கொன்றைப் பொன்னேர் புதுமலர்”-அகநா. 242 : 1

“பொன்னெனக் கொன்றை மலர”-நற்: 242 : 1