பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/297

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

281

இவ்விணரின் நுனியைத் தூக்கி மேல் நோக்கிக் கட்டி வைத்துப் பார்த்ததில் திரும்பவும் இதன் நுனி இணர், கீழ் நோக்கியே வளர்ந்தது. அரும்புதலும், வளர்தலும் சிறிதும் குன்றவில்லை. இவ்வரும்புகளும், அதே மரத்தில் தொங்கிய ஒப்பிணர் அரும்புகளும் போதாகி, ஒரே நாளில் மலர்ந்தன. இச்சோதனையை, வேறு வேறு கொன்றை மரங்களில், வெவ்வேறினங்களில் பன்முறை செய்த பார்த்த போதிலும், இதன் பூங்கொத்து தன்னியல்பு மாறாது கீழ்நோக்கியே வளர்ந்தது. கொன்றையின் இவ்வரிய இயல்பினைத் தமிழிலக்கியம் ‘தூங்கிணர்க் கொன்றை’ என அங்ஙனமே கூறுவதை எண்ணுங்கால் உளம் பூரிக்கின்றது.

பூக்களில் பச்சை நிறமுள்ள ஐந்து புறவிதழ்களும், பொற்காசு போன்ற மஞ்சள் நிறமான ஐந்து அகவிதழ்களும் உள்ளன. அகவிதழ்களும் மகரந்தக் கால்களும் வடிவில் வேறுபாடு உடைமையின், ஒருபுறச் சமச்சீர் (Unilateral Symmetry) உடையதாக இருக்கும். மொட்டின் அடிப்பாகத்து அகவிதழ் சற்றுப் பெரியதாகவும், மேற்பாகத்து அகவிதழ்களை மூடிக் கொண்டுமிருத்தலின், இம்முகை அவிழுங்கால், தவளையின் வாய் போலத் தோன்றும் என்பார் இளங்கீரந்தையார்.

“செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
 தவளை வாஅய பொலஞ் செய்கிண்கிணிக்
 காசின் அன்ன போதீன் கொன்றை
 குறுந்தொடு அலம்வரும் பெருந்தண் காலையும்
 கார் அன்று என்றியாயின்
 கனவோ மற்றுஇது வினவுவன் யானே ”
-குறுந். 148

கொன்றை மரம் பொதுவாக மே, சூன் மாதங்களில் பூக்குமெனத் தாவரவியலார் கூறுப. கொன்றை மலர்தலைக் கார் காலத் தொடக்கத்தின் அறிகுறியாகக் கருதினர் தமிழ் மக்கள். இவ்வுண்மையை மேற்குறித்த குறுந்தொகைப் பாடலிலுங் காணலாம்.

“நாண் மலர்க்கொன்றையும் பொலந்தார் போன்றன
. . . .. . . .. . . .. . . .
 கார்மலிந்தன்று நின்குன்று”
-பரிபா. 14

என்பர் கேசவனார்.

தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், குறித்த பருவத்தில் திரும்புதல் உண்டு. எனினும், ஒரோவழி காலந் தாழ்ப்பானாயின்