பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/319

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



303

இலைகளுடன் இப்பூவிணர் உண்டாகும். இதன் இலையைச் கவட்டிலை என்றும், இலையின் மேற்புறம் பசுமையாகவும், அடிப்புறம் புல்லென்று சற்று வெள்ளியதாகவும் இருக்குமென்றுங் கூறுவர் சங்கப் புலவர். இதன் காய், பட்டையானது; முதிர்ந்த இதன் நெற்று வெண்ணிறமானது; காற்றடிக்கும் போது, இதன் முற்றிய நெற்றிலுள்ள விதைகள் கலகலவென்று சிலம்பின் அரி போல ஒலி செய்யும் எனவும், ஆரியக் கூத்தர் கழையிற் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆடும் பொழுது கொட்டப்படும் பறையைப் போல, காற்றடிக்குங்கால், வாகை நெற்று ஒலிக்கும் எனவும் கூறுவர். வாகைப்பூ கொற்றவைக்குரியதாகலின் ‘கடவுள் வாகை’ எனப்படும்.

“மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை ”-அகநா. 136 : 10

“மல்குசுனை உலர்ந்த நல்கூர் சுரமுதல்
 குமரி வாகைக் கோலுடை நறுவீ
 மடமாந் தோகைக் குடுமியின் தோன்றும்
 கான நீளிடை”
-குறு. 347 : 1-4

“போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த
 கடவுள் வாகைத் துய்வீ ஏய்ப்ப
 பூத்த முல்லை புதல்சூழ் பறவை”
-பதிற்.ப. 66 : 14-16

“கூகைக் கோழி வாகைப் பறந்தலை”-குறுந். 303 : 3

“வாகை வெண்பூப் புரையும் உச்சிய
 தோகை”
-பரிபா. 14 : 7-8

“அத்தவாகை அமலைவால் நெற்று
 அரிஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக்
 கோடை தூக்கும் கானம் ”
குறுந். 369 : 13

“கயிறாடு பறையின் கால்பொரக் கலங்கி
 வாகை வெண்ணெற்று ஒலிக்கும்
 வேய்பயில் அழுவம் முன்னியோரே”
-குறுந். 7 : 3-6

சிற்றரசன் நன்னனது கொங்கண நாட்டில் வாகை மரம் மிகுதி. அவன் வாகை மரத்தைக் காவல் மரமாகக் கொண்டான். அதனைக் கழங்காய்ச் சென்னி நார் முடிச் சேரல் என்பான் வெட்டி வீழ்த்தினான் என்றுரைப்பார் மூதெயினனார்.