பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/344

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

சங்க இலக்கியத்


“ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்
 . . . . . . . . . . . . . . . .
 அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்”

பரி. 4 : 67-69


இக்கடம்ப மாலை முருகனுக்கு உரியதாகையால், முருகனை முன்னிட்டு வெறியாடும் வேலன், இம்மாலையை அணிந்தும், மலரைச் சூடியும் ஆடுவான்.

“கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
 வேலன் கொண்ட வெறிமனை வந்தோய் ”
-நற். 34 : 8-9

இம்மலரைப் பனந்தோட்டுடன் சேர்த்துக் கட்டியும், வேலன் வெறியாடுவான் என்பர் காமக்கண்ணியார்.

“வெண்போழ்க் கடம்புடன் சூடி
 . . . . . . . . . . . . வேலன்
 வெறியயர் வியன் களம்”
-அகநா. 98 : 16-18

மேலைக் கடற்கரைப் பகுதியில் கூலகத்தீவு என்று ஒன்றுண்டு. இதனைத் தலைநகராகக் கொண்டு ‘கடம்பர்’ என்றொரு இனத்தவர் வாழ்ந்தனர். அப்பகுதியில் ‘கடம்பத்தீவு’ என்பதும் ஒன்று. இக்கடம்பர்களது மன்னன் தனக்குக் காவல் மரமாகக் கடம்ப மரத்தைக் கொண்டிருந்தான். இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் இத்தீவின் மேல் படை எடுத்துச் சென்றான். அங்கிருந்த காவல் மரமாகிய கடம்ப மரத்தை அடியோடு வெட்டி வீழ்த்தி வென்றான். இதனால் அவன் ‘கடற்கடம்பெறிந்த காவலன்’ எனப்பட்டான்.[1]

இவ்வரலாற்றுச் செய்தியைக் குமட்டூர் கண்ணனார் பதிற்றுப்பத்தில் ஈரிடங்களிலும் (பதிற்: 11, 20), மாமூலனார் அகநானூற்றிலும் (127) பாடியுள்ளனர் என்பார் இளஞ்சேரனார். [2]

கடம்பினால் ஒரு நிலம் பெயர் பெற்றது. ஓர் இனத்தவர் பெயர் பெற்றனர். இம்மரம் முருகனும், திருமாலும் தங்குமிடமாகச் சிறந்தது. மதுரைக்குக் கடம்ப வனம் என்று ஒரு பெயரைத் தந்தது. இத்தகைய கடம்பு மிக அழகிய கடப்பம் பூவைப் பூத்தது மட்டுமல்லாமல், புகழும் பூத்தது.

“புலவரை அறியாத புகழ் பூத்த கடம்பு”-பரி. 19 : 2


  1. சிலப். 23 : 81
  2. இலக்கியம் ஒரு பூக்காடு. பக்: 525