பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/349

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

333

கினியர் ‘பல கொத்துக்களை உடைய காயாம்பூ’ என்று உரை கூறினார். காயாம்பூச் செடியைச் சிறு புதர் எனலாம். இது கொத்துக் கொத்தாகப் பூக்கும். பூக்கள் மிக அழகிய பளபளப்பான நீல நிறமுள்ளவை. மலரின் அகவிதழ்களுக்கடியில் செந்நிறம் இருக்கும். இச்செடி பூத்திருக்கும் காட்சியை இடைக்காடனார் இரண்டு அகநானூற்றுப் பாடல்களில் சித்திரிக்கின்றார். முல்லை நிலத்தில் நல்ல மழை தொடங்கியுள்ளது. பெயல் பெய்து கழிந்த வைகறைப் பொழுதில் முன்னாள் பூத்த நீலக் காயா மலர்கள் விழுந்துள்ளன. மழையைக் கண்டு, மண்ணிலிருந்து வெளிப்படும் தம்பலப் பூச்சி எனப்படும் மூதாய்ப் பூச்சிகள், அவற்றினிடையே குறுகுறு என ஊர்ந்து செல்கின்றன. நீல மலர்களிடையே சிவந்த மூதாய்ப் பூச்சிகள் தோன்றும் காட்சி. ‘மணிமிடை பவளம் போல அணிமிக’ இருந்ததென்கிறார் புலவர். இங்கே ‘மணிமிடை பவளம்’ என்ற சொற்றொடரை விளக்குதல் வேண்டும்.

அகநானூற்றைத் தொகுத்தவர் அதனை மூன்று பிரிவுகளாக வகுத்தார். முதல் நூற்றிருபது பாக்களுக்கும் ‘களிற்றியானை நிரை’ என்று பெயர். நூற்றிருபத்து ஒன்று முதல் முன்னூறு வரையிலான பாக்களுக்கு ‘மணிமிடை பவளம்’ என்று பெயர். முன்னூற்று ஒன்று முதல் நானூறு வரையிலான பாக்களுக்கு ‘நித்திலக் கோவை’ என்று பெயர். இவற்றுள் ‘மணிமிடை பவளம்’ என்ற சொற்றொடர் நித்திலக் கோவை என்ற பகுதியில் காணப்படுகிறது. இச்சொற்றொடரை உருவாக்கிய இடைக்காடனார், நீலமணி போன்ற காயம்பூக்களிடையே பவளம் போன்ற மூதாய்ப்பூச்சி ஊர்ந்து செல்வதைக் கூறுகின்றார்.

“பெயல்பெய்து கழிந்த பூநாறு வைகறை
 செறிமணல் நிவந்த களர்தோன்று இயவில்
 குறுமோட்டு மூதாய் குறுகுறு ஓடி
 மணிமண்டு பவளம் போல காயா
 அணிமிகு செம்மல் ஒளிப்பன மறைய
 கார்கவின் கொண்ட காமர் காலை”

-அகநா. 374 : 10 - 15
“மணிமிடை பவளம்போல அணி மிகக்
 காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
 ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப
 புலன்அணி கொண்ட கார் எதிர்காலை”

-அக. 304 : 13-16