பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

19

அல்லியின் இலைக்காம்பிலும், பூக்காம்பிலும் உள்ள புறணி எனப்படும் நாரை உரித்துப் பார்த்தால், புறணிக்கடியில் மிக அழகிய துண்ணிய நீலங்கலந்த செம்புள்ளிகள் காணப்படும். நார் உரித்த இக்காம்புகளின் புறத்துள்ள சில செல்களில் (உயிரணுக்களில்) ஆந்தோசையனின் (Anthocyanin) என்ற வேதிப்பொருள் உயிரணுச்சாற்றில் (Cell-sap) கரைந்திருத்தலின் இந்நிறம் பெற்றுத் திகழும். கண் கவரும் இந்நிறத்தை மங்கல மகளிர்க்கு இயற்கையில் உண்டாகும் பருவ கால அழகிற்கு உவமிப்பர். இதனை மாமை எனவும் மாமைக்கவின் எனவுங் கூறுவர். மாமை என்பதற்கு இள மாந்தளிர் போன்ற நிறமென்பாரும், ஈங்கைத் தளிர் போன்ற நிறமென்பாரும், அசோகின் தளிர் போன்ற நிறமென்பாரும் உளர்.

“நீர்வளர் ஆம்பல் தூம்பிடைத் திரள்கால்
 நார் உரித்தன்ன மதனில் மாமை”

-நற். 6: 1-2

“அம்ம வாழி தோழி நம்மூர்ப்
 பொய்கை ஆம்பல் நார் உரிமென்கால்
 நிறத்தினும் நிழற்றுதல் மன்னே
 இனிப்பசந்தன்று என் மாமைக்கவினே”

-ஐங். 35

இந்த ஐங்குறுநூற்றுப் பாடலைச் சற்று விரித்து உரைப்பது ஒக்கும்.

தலைமகனுக்காக வாயில் வேண்டித் தலைவியிடம் புகுந்தார். தலைவனது குணம் கூறுவாராயினர். அவர் அவனுக்கு இல்லாத குணங்களைக் கூறுவதைக் கேட்ட தலைவி, தன் தோழியிடம் கூறுவதாக அமைந்துள்ளது. இப்பாடல்.

‘அம்ம தோழி வாழி! நம்மூர்ப் பொய்கையில் வளரும் ஆம்பலின் மெல்லிய காம்பிலே நார் உரித்தால் காணப்படும் அச்செவ்விய அழகு நிறத்தைக் கண்டிருக்கிறாயன்றோ?அந்நிறத்தைக் காட்டிலும் அழகாக நிழற்றும் என் மாமைக் கவினையுங் காண்டி! அங்ஙனம் திருவுடைய என் மேனி இனிக் கவின் அழியப் பசந்தது’ என்கிறாள்

மேனி பசத்தலாவது மகளிர்க்குப் பிரிவாற்றாமையால் உண்டாகும் வேறுபாடான பொன் நிறமாம் என்பர். இதனைப் ‘பசலைப் படர்தல்’ என்றும் ‘பசப்பு ஊர்தல்’ என்றும், ‘பசலை