பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/357

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

341

அனிச்ச மலரின் மென்மையினும் மாதரடியின் மென்மையை விதந்து கூறுகின்றார். (1120)

இத்துணை மென்மை வாய்ந்த அனிச்ச மலர் என்பது யாது? எங்குளது? என்ன நிறம்? எப்பொழுது பூக்கும்? அனிச்சம், மரமா? செடியா? கொடியா? இவ்வினாக்களுக்குச் சங்க இலக்கியத்தில் விளக்கமில்லை.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர் அ. நமச்சிவாய முதலியார் அவர்கள், லஷிங்டன் என்ற தாவரவியல் அறிஞர்க்குத் தமிழ் நாட்டு மரஞ்செடிகொடிகளின் தமிழ்ப் பெயர்களை அறிவுறுத்தினார் என்பர். லஷிங்டன் அவரது உதவியைக் கொண்டு, அன்றைய சென்னை மாநிலத்தில் வளரும் மரம், செடி, கொடிகளின் தமிழ்ப் பெயர்ப் பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவர் அப்பட்டியலில் ‘அனிச்சம்’ என்பது ‘லாகர்ஸ்ரோமியா பிளாஸ்ரீஜினே’ எனற தாவரப் பெயர் உடையதென்று குறிப்பிட்டுள்ளார்.

உலகில் உள்ள மிகப் பெரிய தாவரப் பூங்காக்களில் தாவரங்களுக்குத் தாவரப் பெயரை எழுதி விளக்குவது வழக்கம். இவற்றின் தாவரப் பெயருடன் தமிழ்ப் பெயரைச் சேர்த்து எழுதும் இரு பூங்காக்கள் உள்ளன. ஒன்று பாரடேனியா தாவரத் தோட்டம். இது சீலங்காவில் உள்ளது. மற்றொன்று கோலாலம்பூர் தாவரத் தோட்டம். இது மலேசியாவில் உள்ளது. இவ்விரு தோட்டங்களிலும் லாகர்ஸ்ரோமியா பிளாஸ்ரீஜினே என்ற சிறு மரத்திற்குத்தான் அனிச்சம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் உலர் படிவம் ஒன்றையும் யாம் பல ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையிலிருந்து வேண்டிப் பெற்றனம். இது மிக அழகான செவ்விய பூக்களையுடையது. இச்சிறு மரத்தை ஆங்கிலத்தில் (Pride of India) இந்தியாவின் பெருமிதம் என்று அழைப்பர்.

இப்போது இச்சிறுமரம் பங்களூரில் உள்ள லால்பாக் தாவரப் பூங்காவில் வளர்க்கப்படுகிறது.

இம்மலர் மிகவும் மெல்லியது. ஆயினும் மோப்பக் குழையும் இயல்பு இதில் இல்லை. இதனால் இது அனிச்சமன்று என்று கூறுவாறுமுளர். இதுவன்றி, வேறு சில புதர்ச் செடிகளை அனிச்சம் என்று கூறுவாரும் இந்நாளில் உண்டு. அனிச்சம் தமிழ் நாட்டில் இப்போது இல்லை. அஃது அழிந்து விட்டது என்பாரும் உளர்.