பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

21

அல்லியை உடைய நீலப்பூ, அனிச்சம்பூ’ என்று உரை கூறுகின்றார். இதனை ஒட்டியே,

“அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல்”-(பரிபா. 12 : 78)

என்ற அடிக்கு ‘அல்லி’யை உடைய கழுநீர், அரவிந்தம், ‘ஆம்பல்’ எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும். அல்லாவழி அல்லி வேறு, ஆம்பல் வேறு போலும் என மயங்க நேரும். மேலும், கழுநீர் முதலாகிய மூன்று மலர்களுக்கும் சாம்பல் நிறமான அல்லி (Perianth) எனும் புறவிதழ் உண்டு. அன்றியும், ஆம்பற் காயக்கும் ‘அல்லி’ என்ற பெயருண்டு. ஆம்பற்பூவின் காயாகிய அல்லியில் வெள்ளிய, சிறு கடுகு போன்ற விதைகள் உண்டாகும். இதனை ‘அல்லியரிசி’ என்பர்.

“ஆம்பல் அல்லியும் உணங்கும்”[1]

என்புழி ‘ஆம்பல் அல்லி’ இருபெயரொட்டு எனவும், அல்லி என்பதற்கு ‘அல்லி அரிசி’ எனவும் உரை கூறுவர் இந்த ‘ஆம்பல் அரிசி’யைக் கணவனையிழந்த கழிகல மகளிர் உண்ணும் ஒரு வழக்கம் உண்டு.

“சிறு வெள்ளாம்பம் அல்லி உண்ணும்
 கழிகல மகளிர் போல”
-புறநா. 280 : 13-14

வீரத் தலைவர்கள் போரில் பட்டு இறந்தால், அவர் தம் நகரம் பொலிவிழந்திருப்பதைத் தாயங் கண்ணியார் பாடுகின்றார்:

“கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி
 அல்லி உணவின் மனைவியோ டினியே
 புல்லென் றனையால் வளங்கெழு திருநகர்”
-புறநா. 250 : 4-6

வள்ளல் பாரியின் பறம்பு நாடு மூவேந்தரால் முற்றுகையிடப்பட்டது உள்ளே அகப்பட்ட மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு நேர்ந்தது. கபிலர் வெளியிலிருந்து கிளிகளின் வாயிலாக நெற்கதிரைக் கொண்டு வரச் செய்து, அதன் அரிசியுடன் ஆம்பல் மலரை அளித்து உணவூட்டினார் என்பர் நக்கீரனார்:

“செழுஞ்செய் நெல்லின் விளைகதிர் கொண்டு
 தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி”
-அகநா. 78 : 17-18


  1. வீ. நெ: 355