பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

செங்கொடுவேரி
பிளம்பாகோ ரோசியா (Plumbago rosea, Linn.)

கபிலர் கூறிய ‘செங்கொடுவேரி’ என்பதற்கு (குறிஞ். 64) ‘செங்கொடுவேரிப்பூ’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர். பிற்கால இலக்கியங்கள் இதனைக் ‘கொடி’யென்றும் ‘மர’மென்றும் குறிப்பிடுகின்றன. இது இக்காலத்தில் ‘கொடிவேலி’ என வழங்கும் ஒரு சிறு செடியே ஆகும்.

சங்க இலக்கியப் பெயர் : செங்கொடுவேரி
பிற்கால இலக்கியப் பெயர் : செங்கொடுவேலி
உலக வழக்குப் பெயர் : கொடிவேலி
தாவரப் பெயர் : பிளம்பாகோ ரோசியா
(Plumbago rosea, Linn.)

செங்கொடுவேரி இலக்கியம்

‘செங்கொடுவேரி தேமா மணிச்சிகை’ என்பது கபிலர் வாக்கு (குறிஞ். 64). செங்கொடுவேரி என்பதற்குச் ‘செங்கொடுவேரிப்பூ’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறினார். கார்ப்பருவ ஒப்பனைப் பூக்களைக் கூறும் இளங்கோவடிகள்,

“செங்கொடு வேரிச் செழும் பூம்பிணையல்[1]

என்றார். கொங்குவேளிர்[2] இதனை முல்லை நிலத்து ஆற்றங்கரை மரங்களின் வரிசையில் வைத்துள்ளார்.

இவற்றைக் கொண்டு இதனைக் ‘கோட்டுப் பூ; முல்லை நிலத்தில் கார் காலப் பூவாகச் செம்மை நிறத்தில் விளங்குவது;


  1. சிலப் : 14 : 91
  2. பெருங்: இலா: 12 : 25