பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/412

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

396

சங்க இலக்கியத்


இம்மலர் வடிவில் சிறியதாயினும், மணத்தாற் பெரியது. ‘மடல் பெரிது தாழை, மகிழ் இனிது கந்தம்[1]’ என்பதுங் காண்க. இப்பூவில் மையத்துளை இருத்தலின், இணரிலிருந்து கழன்று விழும். அதனால், இம்மலர்களை நாரால் கோத்துக் கண்ணியாக்கிப் புனையலாம்.

வகுளம், சிவனுக்குரிய மலர்களுள் ஒன்றென்பர். இப்பூ நம்மாழ்வாருக்குரிய சின்னப்பூ என்பது போல, அவரே ‘வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்’[2]என்று பாடுகின்றார்.

வகுளம்—மகிழம் தாவர அறிவியல்

தாவரவியலில் இச்சிறுமரம் சபோட்டேசி என்ற குடும்பத்தின் பாற்படும். இக்குடும்பத்தில் 40 பேரினங்களும், ஏறக்குறைய 600 சிற்றினங்களும் உள என்பர். இவற்றுள் 8 பேரினங்கள் இந்தியாவில் உள்ளதாக ஹூக்கரும், தமிழ்நாட்டில் ஆறு பேரினங்கள் வளர்வதாகக் காம்பிளும் கூறுவர். வகுளம் இவற்றுள் மிமுசாப்ஸ் என்ற பேரினத்தைச் சார்ந்தது. இப்பேரினத்தில் இந்தியாவில் உள்ள 5 சிற்றினங்களில் 3 மட்டும், தமிழ் நாட்டில் வாழ்கின்றன. வகுளத்திற்கு இலஞ்சி என்ற ஒரு பெயரும் உண்டெனக் கண்டோம். இப்பெயரையே தாவரவியவில் இதன் சிற்றினப் பெயராக ‘இலெஞ்சி’ எனப் பெயர் அமைத்துள்ளார் லின்னேயஸ்.

இதன் இதழ்கள் இணைந்துள்ளமையின், இது ஹெட்டிரோமீரி என்னும் தாவரத் தொகுதியுள் வைக்கப்பட்டுள்ளது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 24 என, சென் எஸ்; சென் என்.கே (1954), சாப்திசிங் (1961) முதலியோர் அறுதியிட்டனர்.

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : ஹெட்டிரோமீரி (அல்லி இணைந்தது)
தாவரக் குடும்பம் : சப்போட்டேசி (Sapotaceae)

  1. ’மடல் பெரிது . . . . . . ’நல்வழி
  2. திருவாய். 4:10:11