பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சிறுமாரோடம்-செங்கருங்காலி
டையோஸ்பைரஸ் எபெனம் (Diospyros ebenum,Koen.)

கபிலர் கூறும் ‘சிறுமாரோடம்’ (குறிஞ். 78) என்பதற்குச் ‘செங்கருங்காலிப்பூ’ என்று உரை கண்டார் நச்சினார்க்கினியர். ‘மாரோடம்’ என்பது இதன் பெயர். இது தழைத்திருப்பதைக் குறிக்கப் ‘பசுமாரோடம்’ எனவும், இதன் மலர் மணத்தைக் குறிக்க ‘நறுமாரோடம்’ எனவும், மலரின் அளவைக் குறிக்கச், ‘சிறுமாரோடம்’ எனவும் புலவர் இதனை விதந்து பாடியுள்ளனர். இது ஒரு பெரிய மரம். உயரமாக வளரும். இதன் மலர் மஞ்சள் நிறமானது. சிறந்த நறுமணம் உடையது.

சங்க இலக்கியப் பெயர் : சிறுமாரோடம், மோரோடம்
உலக வழக்குப் பெயர் : கருங்காலி, ஆச்சா மரம், மாரோடம்
ஆங்கிலப் பெயர் : ரோஸ்உட் (Rosewood)
எபெனி (Ebeny)
தாவரப் பெயர் : டையோஸ்பைரஸ் எபெனம்
(Diospyros ebenum,Koen.)

சிறுமாரோடம்-செங்கருங்காலி இலக்கியம்

‘குல்லை பிடவம் சிறுமாரோடம்’ என்றார் கபிலர் (குறிஞ். 78) இதில் வரும் ‘சிறுமாரோடம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர், ‘செங்கருங்காலிப்பூ’ என்று உரை கூறியுள்ளார். பாலை பாடிய பெருங்கடுங்கோ, ‘நறுமோரோடமோடு’ என்பர் (நற்றி. 337:5). இதற்கு ‘நறிய செங்கருங்காலி மலர்’ என்றார் அதன் உரைகாரர். ‘பசுமோரோடமொடு ஆம்பல் ஒல்லா’ என்பது, ஐங்குறு நூறு (93:2) ‘மாரோடம்’ என்பது இதன் பெயர் போலும். தழைத்திருப்பதைக் குறிக்கப் ‘பசுமோரோடம்’ எனவும், நறுமணத்தைக் குறிக்க ‘நறுமோரோடம்’ எனவும், மலரின் அளவைக் குறிக்கச் ‘சிறுமாரோடம்’ எனவும் பாடினர் என்பது