பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/420

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

404

சங்க இலக்கியத்

கற்பு எனப்படுவது மலரிலும் மெல்லிய காமத்திலிருந்து விரியும். இதனைத் தொல்காப்பியம் ‘காமஞ் சான்ற’ எனத் தொடங்கும் நூற்பாவில் உணர்த்துகிறது. இத்தகைய கற்புக்கு அடையாள மலர் முல்லை. முல்லை என்றாலே அது கற்பைக் குறிக்கும். அதனால் ‘மௌவலும் தளவமும் கற்பும் முல்லை’ என்றது சேந்தன் திவாகரம் [1]. தமிழ் மக்களின் வாழ்வு முல்லையில் அரும்பும். முல்லையில் வளர்ந்து போதாகும். முல்லையில் முகிழ்த்து மலரும். ஆகவே, வாழ்வெல்லாம் முல்லையில் மணக்கும். ஆதலின், முல்லை முதலிடம் பெறுகின்றது.

தமிழ் நிலத்தைப் பாகுபாடு செய்யும் தொல்காப்பியனார்,

“முல்லை , குறிஞ்சி, மருதம், நெய்தல்
-தொல், பொருள். 104


என்று முல்லையை முதற்கண் அமைத்தார்.

இதற்கு உரை வகுத்த நச்சினார்க்கினியர் ‘கற்பொடு பொருந்திக் கணவன் சொற்பிழையாது இல்லிலிருந்து நல்லறஞ் செய்தல் மகளிரது இயற்கை முல்லையாதலின் அது முற்கூறப்பட்டது.’ என்றார்.

அங்ஙனமே இளங்கோவடிகள்[2], தொல்காப்பியத்தைப் பின் பற்றி முல்லைக்கு முதலிடம் தந்துள்ளார்.

முல்லையின் பெயரால் சங்க இலக்கியங்களில் உள்ள பாக்கள் பல: சிறப்பாக,

பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு
கலித்தொகையில் முல்லைக்கலி
ஐங்குறுநூற்றில் ஐந்தாவது பகுதி-முல்லை
அகநானூற்றில் நான்கு எண்ணுள்ள பாக்கள்
(நாலு தனி முல்லை)

முல்லை என்னும் பெயர் தமிழ் நாட்டில் காடு–காடு சார்ந்த புலத்தைக் குறிப்பதோடு, முல்லைத் திணையையும் குறிக்கும். முல்லைத் திணை ஒழுக்கமாவது ஆற்றியிருத்தல். அதாவது அரசு ஆணையாலும், பொருள் ஈட்டுதல் குறித்தும் தலைமகன், தலைமகளைப் பிரிந்து செல்வான். அவன் திரும்பி வருந்துணையும் தலைமகள் ஆற்றியிருக்கும் ஒழுக்கத்தை, முல்லை ஒழுக்கம் என்பர்.


  1. சேந்தன் திவாகரம் : மரப்பெயர் :197
  2. சிலப்: பதிகம்: அடியார்க்கு நல்லார் உரை