பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/425

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

409

பூ முடிக்கத் தெரியாத உன் தலையில் ஏதிலான் கண்ணி முடித்தது யாங்ஙனம்?” என்று வினவினால், என் செய்வது என்று நடுங்கினாள். அது கண்ட தோழி, ‘அவன் கண்ணிப் பூ சூடினாய்; ஆதலின் நின் களவொழுக்கத்தைப் பிறர் அறியாதிருக்கும் பொருட்டு, உனக்குத் தெய்வமால் கொண்டது என்று கூறி, அவனுக்கே உன்னை அடை சூழ்ந்தார் எல்லாருமே’ என்று கூறி மகிழ்விக்கின்றாள்.

எனவே, களவுக்குப் பின் கற்பு ஆகலின், கற்பின் அறிகுறி முல்லையாயிற்று. இதனை, ‘முல்லை சான்ற கற்பின் மெல்லியல்’ (சிறுபாண். 30) என்றார்.

கற்பின் மிகுதி தோன்ற முல்லை மலர் சூடுதல் இயல்பாகி விட்டமையால், முல்லை என்ற சொல்லுக்கே கற்பு என்ற பொருளும் வழங்குவதாயிற்று. இதனைத் திருத்தக்க தேவர் கூறுவர்[1]. நச்சினார்க்கினியர் உரை கூறி விளக்குவர்.

முல்லைப்பூ வாழ்த்து மலருமாகும். முல்லை மலர்களை நாழி எனப்படும் மரத்தாலான படியில் நெல்லோடு கலந்து வைத்துக் கைதொழுது சான்றோரும், மங்கல மடந்தையரும் எடுத்துத் தூவி வாழ்த்துப என்று கூறும் முல்லைப்பாட்டு.

“யாழிசை இன வண்டார்ப்ப நெல்லோடு
 நாழி கொண்ட நறுவீ முல்லை
 அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
-முல்லைப். 7-9

மேலும், நாள் தோறும் அந்தி மாலையில் இல்லத்தை மங்கலமாக்குவதற்கும், இங்ஙனம் முல்லை மலர்களையும், நெல்லையுங் கலந்து தூவி, விளக்கெடுக்கும் வழக்கம் இருந்தது என்பதைச் சிலப்பதிகாரமுங் கூறும்[2].

‘முல்லை நல் யாழ்ப்பாண்’ (ஐங். 478) என வருதலின், முல்லையை இசைக் கருவிகளாகிய குழலொடும்[3], யாழொடும்


  1. ‘தானுடை முல்லை எல்லாம் தாதுகப் பறித்திட்டாளே’-சீ. சிந், 686. இவ்வடிக்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘சீவகனையே கூடுவன் என்றலின் முல்லை – கற்பு’ என்பார்.
  2. “அகநகர் எல்லாம் அரும்பவிழ் முல்லை
     நிகர் மலர் நெல்லொடு தூஉய்ப் பகல் மாய்த்த
     மாலை மணி விளக்கம் காட்டி”-சிலப் 9 : 1-8

  3. “முல்லையந்தீங்குழல்” -சிலப். 17 : 21