பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/432

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

416

சங்க இலக்கியத்

மலரைக் கொண்டே இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகிய பேருண்மைகளை இயைய வைத்துத் தாவர இயல் உண்மைகளைத் தாம் கண்டவாறே பேசுந் திறம் வியந்து போற்றற்பாலது. மேலும், வாழ்வாங்கு வாழ்ந்த வள்ளல் பாரிக்கு, ஓரறிவுயிராகிய முல்லைக் கொடியிடத்துப் பிறந்த கருணையைக் காட்டி, தமிழ் மக்களின் அருள் வெள்ளத்தை அழகுறத் தீட்டி, உலகமெல்லாம் உணர வைத்த புலவர் புகழ் ஓங்குக.

முல்லை தாவர அறிவியல்

தாவரவியலார் முல்லைக் கொடியை ஓலியேசி என்ற தாவரக் குடும்பத்தில் சேர்த்துள்ளனர். இக்குடும்பம் ஓலியாய்டியே, ஜாஸ்மினாய்டியே என்ற இரு துணைக் குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜாஸ்மினாய்டியே என்ற துணைக் குடும்பம், ஜாஸ்மினம் முதலான மூன்று பேரினங்களையுடையது. இப்பேரினத்தில் முல்லையும், முல்லை வகைகளும், மல்லிகையும், மல்லிகை வகைகளும் அடங்கும். பொதுவாக, முல்லைக் கொடியிலும், முல்லை வகைச் செடி, கொடிகளிலும் இலைகள் கூட்டிலையாக இருக்கும். மல்லிகைக் கொடி, மல்லிகை வகைச் செடி, கொடிகளில் இலைகள் தனி இலையாக இருக்கும். முல்லைக் கொடி முல்லை நிலத்தில் வளர்தலின், முல்லைப் புலத்தைச் சார்ந்ததாயினும், பிற புலங்களிலும் காணப்படுகின்றது.

தொல்காப்பியம் கூறும் ஐம்புலங்களில் ஒன்றாகிய முல்லை நிலத்தில் வளரும் பசிய கொடி முல்லை ஆகும். தாவர இயலார் இதனை ‘ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம்’ என்பர். ஜாஸ்மினம் என்னும் இப்பேரினம் ஓலியேசி (Oleaceae) எனும் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தது. இப்பேரினத்தில் ஏறக்குறைய 200 சிற்றினங்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று ‘ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம்’ எனப்படும் முல்லை ஆகும். சங்க இலக்கியத்தில் முல்லை நூற்றுக்கணக்கான இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லையுடன் தளவம், கொகுடி, செம்மல் என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இவற்றுள் ‘தளவம்’, ‘செம்முலலை’ எனவும், ‘கொகுடி’ ஒரு வகை முல்லை எனவும், ‘செம்மல்’ சாதிப்பூ