பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/463

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

447

இருவாட்சிக்கு மயிலையும் பேராகும் என்று கூறும் சூடாமணி நிகண்டு (8). ஆகவே, இருவாட்சியும் மயிலையும் ஒன்றென அறியலாம்.

மயிலையைப் பற்றிய செய்தி புறநானூற்றில் (342) காணப்படுகின்றது. ஒரு குறுமகள் தன் கூந்தலின் இருமருங்கும் இப்பூவாலாகிய கோதையைச் சூட்டிக் கொண்டுள்ளாள். இக்காட்சிக்குக் காட்டுக் காக்கையின் தழைத்த சிறகு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. கானக் காக்கையின் சிறகின் விளிம்புகள் வெண்மையான இறகுகளைக் கொண்டவை. அதன் வெண்மையையும் ஒழுங்கையும் கொண்டு, மயிலைப் பூங்கோதைக்கு கானக் காக்கை உவமையாயிற்று இக்குறுமகளின் நலங்கண்டான் ஒரு தலைமகன். அவளை மணந்து கொள்ள விரும்பிச் சான்றோராகிய அரிசில் கிழாரைக் கண்டு உசாவினான். அவர், அவனது பெருவிருப்புணர்ந்து ‘நெடுந்தகாய்’ இவள் திருநயத்தக்க செவ்வியும், பண்பும் உடையவளே. ஆனால், இவளுடைய தந்தை ஒரு தண்பணைக் கிழவன். இவளை மணத்தல் வேண்டி, வேந்தர் பலர் முயன்று, இவளைப் பெறாராய்ப் பொருது தோற்றோடினர். போரில் பலரைக் கொன்று குவித்த பெருமாட்சி உடையவர் இவள் உடன் பிறந்தார். நீ இதனை அறிந்து, செய்வன தேர்ந்து செய்வாயாக, எனக் கீழ் வரும் பாடலால் அவனைத் தெருட்டுகின்றார்.

“கானக் காக்கைக் கலிச்சிற கேய்க்கும்
 மயிலைக் கண்ணி பெருந்தோட் குறுமகள்
 ஏனோர் மகள்கொல் இவளென விதுப்புற்று
 என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை
 திருநயத்தக்க பண்பின் இவள் நலனே
. . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . .
 மாட்சியவர் இவள் தன்னை மாரே
புறநா. 342

பிற்கால இலக்கியங்களைக் கொண்டு ‘மயிலை’ ஒரு கொடி என்றும், இதன் மலர் வெண்ணிறமானது என்றும் அறிய முடிகிறது ([1] [2] [3]).


  1. “மௌவல்சூழ் மயிலைப் பந்தர்”-சீ. சிந். 485
  2. “இல்வளர் முல்லை மல்லிகை மயிலை”-சிலப். 5 : 191
  3. “வெள்ளை மந்தாரம் முல்லை மல்லிகை வெடிவாய்ச்சாதி
    கள்ளவிழ் மயிலை ஆதி வெண்மலர்” -திரு.வி.பு.இந்.முடி . 12 : 2 - 3