பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/468

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

452

சங்க இலக்கியத்

“மல்லிகை மௌவல் மணங்கமழ் சண்பகம்”
-பரி. 12:77


எனினும் மல்லிகையைப் பெரிதும் ஒத்த அதிரல், குளவி, மௌவல் எனப்படும் மலர்கள் சங்க நூல்களில் பயிலப்படுகின்றன. இவை அனைத்தும் முல்லை இனத்தைச் சேர்ந்தவை. இவற்றைக் குறிஞ்சிக் கபிலர்,

“செருந்தி அதிரல் பெருந்தண் சண்பகம்”-குறிஞ். 75
“கரந்தை குளவி கடிகமழ் கலிமா”-குறிஞ். 76
“ஞாழல் மௌவல் நறுந்தண் கொகுடி”-குறிஞ். 81

எனத் தனித் தனியே கூறுகின்றார். ஆதலின், இவை மூன்றும் வெவ்வேறு மலர்கள் என அறிதல் கூடும். எனினும், கபிலர் மல்லிகை மலரைக் குறிப்பிடவில்லை. ஆயினும், மதுரைக் காஞ்சியின் ஈற்றிலுள்ள வெண்பா, மல்லிகை மலரைக் குறிப்பிடுகின்றது.

“சொல்லென்னும் பூம்போது தோற்றி பொருளெனும்
 நல்லிருந் தீந்தாது நாறுதலால்-மல்லிகையின்
 வண்டார் கமழ்தாம மன்றே மலையாத
 தண்டாரான் கூடற் றமிழ்”
-மதுரைக்கா: வெண்பா.

மேற்குறித்த பரிபாடலில் நல்வழுதியார் மல்லிகையையும், மௌவலையும் வேறு பிரித்தே பாடுகின்றார்.

“மாதவி மல்லிகை மௌவல் முல்லை”

என்று சிலப்பதிகாரச் சீரடி[1] செப்புதலின், பிற்காலத்திலும் மல்லிகை மலர், மௌவலினின்றும் வேறானதென்பது புலனாகும். மேலும், பண்டைய உரையாசிரியர்கள் அதிரல், குளவி, மௌவல் என்பனவற்றுக்குக் கூறும் உரைகளில் மல்லிகைப் பெயர் இடம் பெறுகின்றது.

அதிரல் : புனலிப்பூ ..நச்சினார்க்கினியர்
 குறிஞ். 75; முல்லைப். 51
 காட்டுமல்லிகை ..அரும்பத உரையாசிரியர்[2]
 மோசிமல்லிகை ..அடியார்க்கு நல்லார்.
குளவி : காட்டு மல்லிகை ..நச்சினார். குறிஞ். 76 ;
 மல்லிகை விசேடம்[3];
மௌவல் : மல்லிகை விசேடம்[4];
 மௌவற் பூ ..குறிஞ். 81
 

  1. சிலப். 13 : 120
  2. சிலப். 13 : 156
  3. சீ. சிந். 485 உரை
  4. . . . . . நச்சினார். உரை