பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/516

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

நந்தி–நந்தியாவட்டம்
எர்வட்டாமியா கோரோனேரியா
(Ervatamia coronaria,Stapf.)

குறிஞ்சிப்பாட்டில் (91) கபிலர் கூறும் ‘நந்தி’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘நந்தியாவட்டப் பூ’ என்று உரை கண்டார். நந்தியாவட்டம் ஒரு புதர்ச்செடி.பல்லாண்டு வாழும் இயல்பிற்று.

சங்க இலக்கியப் பெயர் : நந்தி
பிற்கால இலக்கியப் பெயர் : நந்தியாவட்டம், நந்தியாவர்த்தம்
உலக வழக்குப் பெயர் : நந்தியாவட்டை, வலம்புரி
தாவரப் பெயர் : எர்வட்டாமியா கோரோனேரியா
(Ervatamia coronaria,Stapf.)

நந்தி இலக்கியம்

குறிஞ்சிப் பாட்டில் கபிலர் இதனை ‘நந்தி’ என்று குறிப்பிடுகின்றார்.

“நந்தி நறவம் நறும்புன் னாகம்-குறிஞ். 91

‘நந்தி’ என்பதற்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘நந்தியா வட்டப் பூ’ என்றார். பிங்கலம்,

“வலம்புரி நந்தியா வர்த்த மாகும்[1]

என்று கூறி வலம்புரி என்னும் இன்னொரு பெயரையும் இதற்கேற்றும். இதன் மலரின் அகஇதழ்கள் ஐந்தும் அடியில் இணைந்திருப்பினும் மேலே மடல் விரிந்து ஒன்றிற்கொன்று நந்தாமல் வலப்புற வட்டமாக அமைந்துள்ளமையின் ‘நந்தியாவட்டம்’


  1. பிங். நி. 2951