பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/528

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

512

சங்க இலக்கியத்

இது கொத்தாகப் பூக்கும் என்பதால் ‘குவியிணர் எருக்கு’ என்றார் புலவர். மலரில் ஐந்து புறவிதழ்கள் விரிந்தும், அகவிதழ்கள் ஐந்தும் ஒரு குமிழாகத் தோற்றந்தரும், இக்குமிழின் வடிவம் ஐந்து பட்டையாக ஒட்டிய அகவிதழ்களின் முனை மொட்டையாகவும், அழகாகவும் காட்சி தரும். இதனைக் குவிந்த முகிழ் எனபர் புலவர்.

“குறுமுகிழ் எருக்கங்கண்ணி”-நற். 220 : 3
“குவிமுகிழ் எருக்கங்கண்ணியும்”-குறுந். 17 : 2

எருக்கு இருவகையானது. வெள்ளிய நிறமுடைய பூக்களை உடையது வெள்ளெருக்கு ஆகும். இச்செடி அருகியே காணப்படும். சிறப்பானது. இது சிவபெருமான் சடை முடியில் உள்ளதென்பார் கம்பர். வெளிர் நீல நிறமான பூக்களை உடைய எருக்கு வெற்றிடங்களில் யாங்கணும் காணப்படும்.

இம்மலர் நறுமணம் அண்டாதது என்றார் ஒரு புலவர்.[1] இது மணமற்றது என்பதை மறைமுகமாகக் கூறும் ஒரு பாடல், தொல்காப்பிய உரையின் மேற்கோளாகக் காட்டப்படுகிறது. பரத்தை வீட்டிலிருந்து மீளும் தலைவன், மணமிக்க குவளைப் பூமாலையைச் சூடி வந்தான். தெருவில் எருக்கம்பூவை வைத்து விளையாடிய குழந்தையும் உள்ளே வந்தது. குவளைக் கண்ணி சூடிய தலைவனைப் பரத்தை தழுவியதால், அதனை ஏற்காமல் மகன் சூடியிருந்த எருக்கு நன்றென அவனைத் தழுவினாளாம்.

“ஒல்லேம் குவளை புலாஅல் மருங்கின்
 புல்லெருக்கங் கண்ணி நறிது”

-தொல். சொல்: 57-உரை மேற்கோள்


மணமிக்க எருக்கை ‘நறிது’ என்றது குற்றமாகாது என்பதை விளக்கும் உரையாசிரியர் செந்நாவரையர், ‘எருக்கங் கண்ணி நறிதாதற்கு மகிழ்நன் செய்த துனிகூர் வெப்பம், முகிழ்நகை முகத்தால் தணிக்கும் புதல்வன் மேல் ஒரு காலைக் கொருகால் பெருகும் அன்பு காரணம்’ என்றார்.


  1. ‘விரைசார்ந்து அறியாத புல்லெருக்கங் கண்ணி’ -வாட்போக்கிக் கலம்பகம்