பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/535

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



519

இக்கொடி கடற்கரை மணல் மேட்டில் நீரில்லாது வறண்ட மணலிலே படரும். இம் ‘மாக்கொடி’ கருஞ்செம்மை நிறமானது. இதனைக் ‘குதிரைக் குளம்புக் கொடி’ எனவும், ‘அடம்பு’ எனவும் வழங்குவர். இதன் இலை குதிரைக் குளம்பு போன்றதன்று. ஆயினும், மானின் குளம்பு போலப் பிளவு பட்டிருக்கும் என்பதைப் புலவர் கூறுவர். மகளிர் இக்கொடியைப் பறித்து விளையாடுவர் எனவும், நோன்பிருக்கும் பெண்டிர் மணல் மேட்டில் அமர்வதற்கு இக்கொடிகளைப் பறித்துப் போட்டிருப்பர் எனவும், இக்கொடி தலைவனது தேர்க்கால் பட்டு அறுபடும் எனவும் கூறுவர்.

“அடும்பிவர் அணிஎக்கர் ஆடி மணந்தக்கால்”
-கலி. 132:16
“வறள் அடும்பின் மலர் மலைந்தும்”—பட்.பா. 65

“முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
 ஒண்பல் மலர கவட்டிலை அடும்பின்
 செங்கேழ் மென்கொடி ஆழி அறுப்ப”

-அகநா. 80 : 8- 10
“படிவ மகளிர் கொடிகொய்து அழித்த
 பொம்மல் அடும்பின் வெண்மணல் ஒருசிறை”

-நற். 272 : 2ー3


அடும்பின் பூ செந்நீல நிறமானது. இப்பூவின் தோற்றம் குதிரையின் கழுத்தில் கட்டப்படும் சதங்கை மாலையின் மணி போன்றது. இதனைத் ‘தார்மணி ஒண்பூ’ என்பார் நம்பி குட்டுவனார். இப்பூ மலராத பருவத்தில் இம்மணியை ஒத்திருக்கும். நன்கு விரிந்த இம்மலர் ‘பாலிகை’ போன்றது. மண விழாவில் கலங்களில் முளைகளை இட்டு வைக்கும் மண் குவளைக்கும் ‘பாலிகை’ என்று பெயர். இதனால், இம்மலருக்கும் ‘பாலிகை’ என்ற பெயரும் உண்டு[1][2].

கடற்கரையிற் குலவும் தலைவனும், தலைவியும் இக்கொடி படர்ந்த மணல் மேட்டில் அமர்ந்து களிப்பர். அவன் அவளது கூந்தலில், இம்மலரைச் சூட்டுவான். இம்மலரோடு நெய்தற் பூவையுஞ் சேர்த்துத் தொடுத்த நெய்தற் பூவையுஞ் சேர்த்துத் தொடுத்த கோதையை மகளிர் சூடுவர்.


  1. ‘அடும்பு பாலிகை’-பிங். நிகண்டு.
  2. திணைமா. நூற். 51