பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வள்ளை
ஐபோமியா ரெப்டன்ஸ் (Ipomoea reptans,Poir.)

வள்ளை இலக்கியம்

‘வள்ளை’ என்பது தண்ணிரில் மிக நீண்டு வளரும் கொடி. இக்கொடியின் தண்டில் சிறு துளை இருக்கும். இதனைப் பரணர்,

“அம்தூம்பு வள்ளை அழற்கொடி மயக்கி
-அகநா. 376 : 14


என்று பாடுகின்றார். இதன் இலைகளைச் சமைத்துண்ண மகளிர் கொய்வர்.

“வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்”-பதிற். 29 : 2

இக்கொடி நீர் வயலிலும் வளரும் என்பதைப் புறநானூறு கூறும். (புற. 399 : 6).

இக்கொடியில் ஊதா நிறமான மலர்கள் பூக்கும். வள்ளையின் கொடி வளைந்து (புறநா. 16 : 13) நெளிந்து, நீண்டு வளருமாதலின், (மது. கா. 255) இதனையே மகளிர் காதுக்கு உவமையாகக் கூறுகின்றது. பிற்கால இலக்கியம்.[1]

நிகண்டுகள் இதற்குத் ‘தாளிகம்’ என்ற ஒரு பெயரைச் சூட்டுகின்றன.


  1. “வள்ளைத்தாள் போல் வடிகாது இலைகாண்”
    -மணிமே. 25 : 5