பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/562

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

546

சங்க இலக்கியத்

பூக்காரியின் சொற்களோடு, பாதிரிப் பூவின் மணமும் புகுந்து அவளைத் தாக்கி விட்டன. பாதிரிப் பூவின் நறுமணம் பிரிந்தோர் உள்ளத்தில் காம உணர்வைத் தூண்டி விடும் தன்மைத்து. அதனால், நொந்து போன அவள், தன்னையும் மறந்து பூக்காரிக்காக நெஞ்சம் நொந்து பேசுகிறாள். ‘காதலனைப் பிரிந்துள்ள என்னை பாதிரிப் பூவின் மணம் ஒரு தரம் தாக்கியதிலேயே, நெஞ்சத்தில் சோர்வை உண்டாக்கி விட்டதே! தன் பூக்கூடையிலேயே இதன் மணத்தைச் சுமந்து செல்பவள், தன் கணவனை விட்டுப் பிரிந்தன்றோ போகின்றாள். இவளை இம்மணம் எவ்வாறு தாக்குமோ?’ என்று வினவி அவளுக்காக நொந்து கொள்கிறாள்.

“. . . . . . . . துய்த் தலைப் பாதிரி
 வால்இதழ் அலரி வண்டுபட ஏந்தி
 புதுமலர் தெருவு தொறும் நுவலும்
 நொதும லாட்டிக்கு நோம்என் நெஞ்சே”
-நற். 118 : 8-11

பாதிரிப் பூ குடி நீருக்கும் தன் மணத்தை ஏற்றுவது. மலர்ந்த மலரைப் புதிய மண் பானையில் பெய்து வைப்பர். பின்னர் எடுத்து விட்டு, அப்பானையில் நீரை ஊற்றி வைப்பர். இதன் மணத்தைப் புதிய பானை வாங்கிக் கொள்ளும். பின்னர் தன்பால் ஊற்றிவைக்கப்பட்ட நீருக்கு ஏற்றும் எனக் கூறும் நாலடியார்[1].

‘பாதிரிப்பூ வாடி அழியும். புதிய பானை ஓடும் ஓர் நாள் உடைந்து அழியும். ஆனால், அதிலிருந்த பாதிரியின் மணம், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு இடம் மாறினாலும், அழியாதது போன்று, உயிரும் அழிவில்லாதது’ என்று கூறி நீலகேசி, குண்டலகேசியுடன் வாதிட்டாள் என்பர். கபிலரும், ‘தேங்கமழ் பாதிரி’ (குறிஞ். 74) என்பர். இத்துணை நறுமணமுள்ள பாதிரிப்பூ மரத்தில் பூக்கும் சினைப் பூவாகும். இம்மரம் பருத்த அடியினை உடையது. இது வேனிற் காலத்தில் பூக்கும்.

அதிலும், வேனிற்காலத்தில் கடுங்கதிர் தெறுதலின், இதன் இலைகளெல்லாம் உதிர்ந்து போகும். மேலும், இதனை ‘அத்தப் பாதிரி’, ‘கானப் பாதிரி’, ‘வேனிற் பாதிரி’ என்றெல்லாம் கூறுப. ஆதலின் இது பாலை நிலப்பூ.


  1. “ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு
    தண்ணீர்ககுத் தான்பயந் தாங்கு” -நாலடி. 139:2-4