பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/564

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

548

சங்க இலக்கியத்

பாதிரி மலர், நீண்ட இணர்த்தண்டில், காம்பிற்கு ஒரு பூவாக 20 பூக்கள் வரை மலரும். இதன் மலரைப் புலவர் பெருமக்கள் நன்கு பிரித்தறிந்து கூறுகின்றனர். இதன் புறவிதழ்கள் மஞ்சள் நிறமானவை. புறவிதழ்களுக்குள் 5 அகவிதழ்கள் செந்நீல ஊதா நிறமாகக் காணப்படும். இவை அடியில் இணைந்து,புனலாகவும் மேலே மடல்கள் விரிந்துமிருக்கும். அகவிதழ்ப் புனல் சற்று வளைந்து காணப்படும். இதனை,

“வேனிற் பாதிரிக் கூனி மாமலர்” -அகநா. 257 : 1

என்றும்,

“வேனிற் பாதிரிக் கூன் மலரன்ன” -குறுந் 147 : 1

என்றும் கூறுவர். அகவிதழ்களின் அடிப்புற இதழ்கள் இரண்டும் சற்றுத் தாழ்வாகவும், மேற்புற இதழ்கள் மூன்றும் சற்று நீண்டு நிலையாகவும் அமைந்திருக்கும். இதழ்கள் மென்மையானவை, மேற்பகுதியில் நான்கு மகரந்த இழைகள் விரிந்திருத்தலின், துய்யென்றிருக்கும். இதனை,

“அத்தப் பாதிரி துய்த்தலைப் புதுவீ”-அகநா. 191 : 1

என்று கூறுவர். இம்மலரின் கருஞ்செந்நீல நிறத்தையும், இதழ்களின் பஞ்சுத் தன்மையையும், இதழ்களின் உள்ளமைப்பையும், உளத்துட் கொண்டு

“ஒவ மாக்கள் ஒள்ளரக் கூட்டிய
 துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி”
-நற். 118 : 7-8

என்று ஓவியர் அரக்கு வண்ணத்தில் தோய்த்த ‘துகிலிகை’ என்னும் எழுதுகோலை உவமை கூறுவர், பாலை பாடிய பெருங்கடுங்கோ.

பாதிரிப் பூவின் உள்ளமைப்பை உவமித்தற்குத் தோல் போர்த்தப்பட்ட யாழை விளக்க முனைந்தார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,

யாழினது பத்தர் மேல் முட்டமாகத் தோல் போர்த்தப்பட்டு இருக்கும். அதனை இலக்கியம் ‘பச்சை’ என்று கூறும். யாழின் பத்தரைத் தோலின் பொதிந்து, தோலின் பொருந்துவாய் தைக்கப்பட்டிருக்கும். அத்தோலுக்குத் ‘துவர்’ என்னும், காவி நிறம் ஊட்டப்படும். காவி நிறத்தோடு தைக்கப்பட்டுள்ள பொருத்துவாயின் தையல் ஒழுங்கிற்கும், பாதிரிப் பூவின் அகவிதழ் அமைப்பை, உவமை கூறி விளக்குகின்றார் இப்பெரும்புலவர்.