பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/565

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

549

பாதிரிப் பூவைக் கூர்ந்து நோக்கியறிந்த அவர், அதனை வகிர்ந்தும் பார்த்துள்ளார் போலும்! பாதிரியினது அகவிதழ்களின் உட்புறமாகத் தோலின் மயிர் போன்று, பஞ்சிழை போன்ற நுண்மயிர் நிறைந்திருக்கும். இதழின் நடுநரம்பு இணைத்துத் தைக்கப்பட்டது போன்று அமைந்தது. இதனையே யாழின் ‘பச்சை’க்கு உவமையாக்கினார்.

“பாசிலை ஒழித்த பராரைப் பாதிரி
 வள்இதழ் மாமலர் வயிற்றிடை வகுத்ததன்
 உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை”
-பெரும்பா. 4-6

மற்றொரு புலவர் இதனை மகளிரது வயிற்றில் அமைந்த மயிர் ஒழுங்கிற்கு உவமையாகக் கூறுவர்.

“வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன
 மயிர்ஏர்பு ஒழுகிய அம்கலுழ் மாமை
 நுண்பூண் மடந்தை”
-குறுந். 147 : 1-3

இவ்வாறு மயிரொழுங்காகத் தோன்றும் அகவிதழ்கள் இணைந்துள்ள பகுதி, நல்ல மஞ்சள் நிறமுள்ளதாக இருக்கும். எனவே, இம்மலரின் புறவிதழ்கள் பொன் தகடு போன்ற மஞ்சள் நிறமுடையன. அகவிதழ்கள் புறத்தே கருஞ் செந்நீல நிறமும், உட்புறத்தில் பட்டு போன்ற பஞ்சமைப்புடன் செந்நீல நிறமும், இவற்றின் அடிப்புறம் மஞ்சள் நிறமும் கொண்டு, பன்னிறப் பாங்கில் மிக அழகாக விளங்கும்.

கேரளத்தில் திருவாதிரைத் திருநாளில் பெண்கள் ஒரு நோன்பு மேற்கொள்வர். அதனால் மங்கல நாண் நீடிக்க வேண்டிப் பாதிரிப் பூவைச் சூடிக் கொள்வர். அந்நாளில் திருமணம் ஆகாதோரும், மங்கலம் பெற வேண்டி இப்பூவைச் சூடிக் கொள்வர்.

நல்ல மனைவி கிடைப்பதற்காகப் பாதிரிப் பூவை அம்பிகைக்கு அணிவிப்பர் என்று புட்ப விதிகள் கூறும்.

“பாதிரி அம்பிகைக்கு அணியின் இல்லாள்எய்தும்”[1]

பாதிரியின் பெயரால் திருப்பாதிரிப்புலியூர் அமைந்துள்ளது. ஞானசம்பந்தர்,

“பூக்கமழும் புனற்பாதிரிப் புலியூர்”[2]

என்கிறார்.


  1. புட்பவிதி. 40 : 1
  2. ஞான. தே. திப்பாதிரி. 8