பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/585

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



569

முள்ளி–1 . நீர்முள்ளி இலக்கியம்

முள்ளை உடையது முள்ளி என்றாலும், சங்க இலக்கியங்களில் இரு முள்ளிச் செடிகள் கூறப்படுகின்றன. ஒன்று, மருத நிலத்து வயல் வரப்புகளிலும், வாய்க்கால் கரைகளிலும் வளரும் வலிய சிறு செடி. இதற்கு நீர்முள்ளி என்றும், முள்ளி என்றும், மீன் முள்ளி என்றும் பெயர்கள் உண்டு.

மற்றொன்று, கடலோரத்தில் மணல் மேடுகளிலும், உப்பங்கழியில் நீர் நிலைகளிலும் புதர் போன்று செழித்து வளரும் மிக வலிய பெருஞ்செடி. இதற்குக் கழிமுள்ளி, கழுதை முள்ளி என்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.

இவையிரண்டும் சங்கப் பாடல்களில் கூறப்படுகின்றன.

இவையிரண்டிலும் நீல நிறப் பூக்களும், முட்களும் நிறைந்திருக்கும். நீர்முள்ளி என்ற மருத நில முள்ளிச் செடியில் உள்ள முள் சற்று வளைவாக இருக்கும். கழிமுள்ளி எனப்படும் நெய்தல் நில முள்ளிச் செடியில் மலிந்து உள்ள முட்கள் நேரானவை. இதனைக் கொண்டு, இவை இரண்டும் வேறெனக் கொள்ளலாம்.

முதற்கண் மருதநில முள்ளிச் செடியைப் பற்றிய விளக்கங்களைக் காண்பாம்.

“கூன்முள் முள்ளிக் குவிஇலைக் கழன்ற
 மீன்முள் ளன்ன வெண்கால் மாமலர்
 பொய்தல் மகளிர் விழவு அணிக்கூட்டும்”
–அகநா. 26 : 1-3

“கூன்முள் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
 நூலறு முத்தின் காலொடு பாறித்
 துறை தொறும் பரக்கும்”
-குறுந். 51 : 1-3

“. . . . . . . . . . . . முட்சினை
 முகைசூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக்
 கொடுங்கால் மாமலர் கொய்துகொண்டு, அவண”

-பெரும். 214-216


இம்முள்ளிச் செடி வளைந்த முட்களை உடையது எனவும், அரும்புகளைச் சூழ்ந்த கொம்புகளை உடையதெனவும், வளைந்த காலையுடைய மறிந்த வாயையும், நீல நிறத்தையுமுடைய பூவைக் கொண்டது எனவும், இம்மலர்களை மகளிர் கொய்து விழவு