பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/591

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



575

“இருகருங் கயலோடு இடைக்குமிழ் எழுதி”[1]

என்றார்

மணிமேகலையில் “குமிழ் மூக்கு இவைகாண்”[2] என்றும் பேசப்படுகின்றது.

இதன் மலர்கள் நுனிவளராப் பூந்துணராகப் பூக்கும். 2-3 மலர்களே ஒரு கொத்தில் காணப்படும். பூங்கொத்து கிளையினின்றும் தொங்கி, குழை போன்று அசைந்தாடும் என்பர்.

“ஊசல் ஒண்குழை உடைவாய்த் தன்ன
 அத்தக் குமிழின் ஆய்இதழ் அலரி
 கல்அறை வரிக்கும் புல்லென் குன்றம்”

-நற். 286 : 1-3


குன்றுடைய பாலை நிலப் பாதையில் இம்மலர் பூத்து ஊசலாடும் என்றமையின், இது பாலை நில மலர் என்பதாகும். இவ்வியல்பினைக் கார் நாற்பதிலும் காணலாம். மேலும் இது கார்காலத்தில் பூக்கும்.

“இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப்
 பொன்செய் குழையின் துணர் தூங்கா”
[3]

மலைப்பகுதியில் வளரும் இச்சிறுமரத்தின் பூக்கள் காயாகிப் பழமாகும். பழமும் பொற்காசு போல் மஞ்சள் நிறமானது. இம்மரத்தில் பெண் மான் உராய்வதால், இதன் கனிகள் உதிரும் என்றும், இக்கனிகளை மான்கள் உணவாகக் கொள்ளும் என்றும் கூறுவர்.

“படுமழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து
 உழைபடு மான்பிணை தீண்டலின் இழைமகள்
 பொன்செய் காசின், ஒண்பழம் தாஅம்
 குமிழ்தலை மயங்கிய குறும்பல் அத்தம்”
-நற். 274 : 2-5}}

“அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
 எறிமட மாற்கு வல்சியாகும்”
-நற் 6 : 7-8
(கொடுமூக்கு குமிழின் என இயைக்க)

பிங்கல நிகண்டு[4] இதற்குக் கூம்பல், கடம்பல் என்ற இரு பெயர்களைச் சூட்டுகின்றது. குமிழத்தைத் தாவரவியலில்

 

  1. சிலப். 5 : 205
  2. மணி. 20 : 48
  3. கார் . நா. 28
  4. பிங். நி. 2685