பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/597

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

581

மற்று, பொன்னேர் பூட்டும் முதல் உழவின் போது, நொச்சித் தழையை மாலையாகச் சூடிக் கொள்வர் என்றார் கண்ணங் கூத்தனார்.

“கருங்கால் நொச்சிப் பசுந்தழை சூடி
 இரும்புனம் ஏர்க்கடி கொண்டார்.”
[1]

தழையுடையாகவும், தொடலையாகவும் மகளிருக்குப் பயன்படும் நொச்சிப் பூங்கொத்தை, மாலையாகச் சூடிப் போர் புரிந்த மறக்குடி மகனின் மார்பில் பகைவனின் வேல் பாய்ந்தது. குருதி கொப்புளித்தது. நீல நிற நொச்சி மாலை குருதியால் சிவந்து புரண்டது. இதனைப் பார்த்த பருந்து இஃதோர் நிணத் துண்டமெனக் கருதி, மாலையை இழுக்க முனைந்தது என்கிறார் வெறிபாடிய காமக்கண்ணியார்.

“நீர் அறவு அறியா நிலமுதற் கலந்த
 கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை
 மெல்லிழை மகளிர் ஐதுஅகல் அல்குல்
 தொடலை ஆகவும் கண்டனம்; இனியே
 வெருவரு குருதியொடு மயங்கி உருவுகரந்து
 ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்து
 பருந்து கொண்டு உகப்பயாம் கண்டனம்
 மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே”
-புறநா. 271

இங்ஙனம் அகத்துறையிலும், புறத்துறையிலும் பங்கு கொள்ளும் நொச்சிமரத்திற்குக் ‘காதல் நன்மரம்’ என்று பட்டங் கொடுத்துப் பாராட்டுரை பகர்கின்றார் மோசி சாத்தனார்.

“மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி!
 போதுவிரி பல்மா னுள்ளும் சிறந்த
 காதல் நன்மரம் நீ நிழற்றிசினே
 கடியுடை வியல் நகர்க்காண் வரப்பொலிந்த
 தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி
 காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்
 ஊர்ப் புறங் கொடாஅ நெடுந்தகை
 பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே ”
-புறநா: 272


  1. கார். நாற். 39 : 2-3