பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/611

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

தும்பை
லியூகஸ் ஆஸ்பெரா (Leucas aspera,Spreng.)

‘தும்பை துழாஅய்’ என்று கபிலர் இதனைக் குறிஞ்சிப் பாட்டில் (90) குறிப்பிடுகின்றார். இது ஒரு செடி. வெற்றிடங்களில் தழைத்துக் கிளைத்து வளரும். மலர் தூய வெண்ணிறமானது. இது ஒரு போர் மலராகும். போரில் கைகலக்கும் இரு படைகளும் சூடிக் கொள்ளும் பூங்கொத்து இத்தும்பையாகும். தும்பை மலர் மருந்துப்பொருளாகவும் பயன்படும்.

சங்க இலக்கியப் பெயர் : தும்பை
தாவரப் பெயர் : லியூகஸ் ஆஸ்பெரா
(Leucas aspera,Spreng.)

தும்பை இலக்கியம்

அனைத்துத் திணைகளும் பூக்களாலேயே பெயர் பெற்றனவாயினும் நச்சினார்க்கினியர் ‘தும்பை’ என்பது சூடும் பூவினாற் பெற்ற பெயர் என்று சிறப்பித்துரைக்கின்றார். இதனைப் போர் மலர் என்று கூறுவர் இளஞ்சேரனார்[1]. வெட்சி முதல் நொச்சி வரை எதுவாயினும் போர்க்களத்தில் கைகலப்பு நேரும் போதும், தும்பைத் திணையாகும் என்று கூறும் புறப்பொருள் வெண்பா மாலை[2]. போர் தொடங்கும் போதே இரு படைகளும் தும்பைப் பூவைச் சூடிக் கொள்ளும். இதுவும் தும்பைக்கு ஒரு சிறப்பாகும்.

“தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி”-குறிஞ். 90

என்று கபிலர் இதனைத் துழாயுடன் சேர்த்துப் பாடுகின்றார். தும்பைச் செடி தாவரவியலில் துழாய்ச் செடிக் குடும்பத்தைச்


  1. இலக்கியம் ஒரு பூக்காடு பக். 296
  2. “....போர்கருதித் துப்புடைத்தும்பை மலைந்தான்”
    -பு. வெ. மா. தும்பை: 1