பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/612

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

596

சங்க இலக்கியத்

சேர்ந்தது. தும்பைப் பெயர் பல செடிகளுடன் இணைத்துப் பேசப்படினும், சிறு தும்பை, பெருந் தும்பை அல்லது மலைத் தும்பை மட்டுமே தும்பையினத்தவையாகும். இவற்றுள், சிறு தும்பையே இங்குப் பேசப்படுவது. இச்செடி வெற்றிடங்களில் ஒன்று முதல் இரண்டடி உயரம் நீண்டு, கிளைத்துச் செழித்து வளரும். இதன் இலைகள் எதிரடுக்கில் கிளைகளில் உண்டாகும். இலைக் கோணத்தில் கிளைக் குருத்து, இரு கிளைகளாக வளரும். இதனால், இதனைக் ‘கவட்டிலைப் பைந்தும்பை’ என்று புலவர் கூறுவர். இரு இலைகளை ஒட்டி, பசுங்கிண்ணம் போன்ற மஞ்சரி உண்டாகும். இதில் தூய வெண்மையான மலர்கள் உண்டாகும். கொத்துக் கொத்தாகத் தோன்றும் இக்கிண்ண அடுக்குகளான இப்பூங் கொத்தைக் ‘கொத்தலர் தும்பை’[1] என்பர் திருத்தக்க தேவர். இப்பூங்கொத்தைச் சூடும் போது, இதன் இலைகளும் அதிலிருக்கும், போருக்கெழுந்தவர் கவட்டிலையோடு கூடிய தும்பைக் கொத்தை அங்ஙனமே சூடிக் கொண்டனர் என்பர் கம்பர்.[2] இதனை இங்ஙனமே நெடுங்கல்வியாரும் பாடுவர்.

“. . . . . . . . . . . . பாசிலைக்
 கவிழ்பூந் தும்பை நுதல்அசைந் தோனே”

-புறநா. 283 : 14-15


தும்பைத் திணையைச் சிறப்பித்துக் கூறுகின்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்.

“மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
 சென்றுதலை யழிக்கும் சிறப்பிற் றென்ப”

-தொல். பொருள்: 2 : 12


வீரத்திற்கு வீரம், வீரனுக்கு வீரன், வலிமைக்கு வலிமை, திறத்திற்குத் திறம் என்னும் நெறித் தூய்மையுடன் போர் புரிவதால், தூய்மையான வெள்ளிய தும்பை சிறப்புடைய திணைப் பூவாகின்றது. போரில் எதிர்த்துப் போரிடும் பகைவரும் தூயவராதல் வேண்டும் என்பதைக் குறிப்பிடுவதற்குத் ‘தும்பைப் பகைவர்’ என்றார் குமட்டூர் கண்ணனார் (பதிற். 14 : 8). மேலும், விழுப்புண் பெறாத வீரரை எதிர்த்துத் தும்பையைச் சூட மாட்டார் என்றுரைக்கும் பதிற்றுப்பத்து.


  1. சீ. சிந்தாமணி: 2227
  2. “கொத்தலர் கவட்டி லையோடு ஏர்பெறத்
    துளவியல் தும்பையும் கழியச் சூடினான்”
    -கம்ப இரா. முதற்போர்: 115