பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/632

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

616

சங்க இலக்கியத்

அகில் மணமும், சந்தன மணமும் கொடிச்சியின் கூந்தலில் நாறுமென்று எயிற்றியனார் கூறுகின்றார்.

“. . . . . . . . . . . . கமழ் அகில்
ஆரம் நாறும் அறல்போல் கூந்தல்”
-குறுந். 286 : 2-3

சந்தன மரத்தின் மலர் வெண்மையானது. இதில் மணமில்லையாயினும், இதில் உண்டாகும் தேனை உண்ணுதற்கு, வண்டுகள் வந்து மொய்க்கும். இவ்வியல்பினைப் புலவர்கள் கண்டு பாடியுள்ளனர்.

ஆரம்—சந்தனம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : மானோகிளமைடியே
(Monochlamydeae) என்ற பெருந்தொகுதியில், எகிளமைடோஸ்போரியே (Achlamydosporeae) என்ற தொகுதியைச் சேர்ந்தது. இவற்றுள் அல்லியும், புல்லியும் இணைந்திருக்கும்.
தாவரக் குடும்பம் : சான்டலேசி (Santalaceae)
தாவரப் பேரினப் பெயர் : சான்டாலம் (Santalum)
தாவரச் சிற்றினப் பெயர் : ஆல்பம் (album)
சங்க இலக்கியப் பெயர் : ஆரம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : சாந்தம், சாந்து, சந்தனம்
உலக வழக்குப் பெயர் : சந்தனமரம்
தாவர இயல்பு : உயர்ந்து வளரும் மரம். 3000 அடி உயரமான மலைகளில் வளரும். குடகு, நீலகிரி மலைகளில் வளர்கிறது. மேலும், இதன் விதைகள் காவிரி நீரில் மிதந்து வந்து, கொள்ளிடக்கரைகளில் மிக நன்றாக உயர்ந்து செழித்து வளர்கின்றன. மேலும், சந்தனக் கன்று பிறமரங்களின் வேர்களில் ஒட்டுண்ணியாக வளரும் இயல்புடையது.