பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/637

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



621

காஞ்சி என்னும் சொல் காஞ்சி என்னும் மரப்பெயருடன், வேறு மூன்று பொருள்களையும் குறிக்கும் என்பது பிங்கலம்[1].

காஞ்சி என்பது ஒரு குட்டையான மரம். நீர்த் துறைகளில் தழைத்து வளரும். மருத மரத்துடன் வளரும். வளைந்து, தாழ்ந்த கிளைகளை உடையது. இதன் நிழலில் குரவைக் கூத்தாடுவர். நீர் நிலைகளில் தாழ்ந்து பூக்கும் இதன் மலர்களை வாளை மீன் கதுவும். கொத்துக் கொத்தாகப் பூக்கும். இதன் பூங்கொத்து நீளமானது. நுனியில் சிறுத்து, மாலை தொடுத்தது போல அழகாகத் தோன்றும். இதன் மலர் அழகானது; நறுமணமுடையது. தாதுக்களைச் சொரிந்து விரிந்து பூக்கும்; நீலநிறமானது என்றெல்லாம் புலவர்கள் கூறுவர்.

“முடக்காஞ்சிச் செம்மருதின்”-பொருந. 189

“. . . . . . . . . . . .அவிழ் இணர்க்
 காஞ்சி நீழல் குரவை அயரும்
 தீம்பெரும் பொய்கைத் துறைகேழ் ஊரன் ”

-அகநா. 336 : 8-10
“கோதை இணர குறுங்காற் காஞ்சிப்
 போதவிழ் நறுந்தாது அணிந்த கூந்தல் ”

-அகநா. 296 : 1-2
“மருதுஇமிழ்ந்து ஓங்கிய நளிஇரும் பரப்பின்
 மணல்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு
 முருக்குத்தாழ்பு எழிலிய நெருப்புறழ் அடைகரை ”

-பதிற். ப. 23 . 18-20
“நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப்
 பூக்கதூஉம் இனவாளை”
-புறநா. 18 : 7-8

“மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்”-கலி. 26 : 3

“காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல் ”-குறிஞ். 84

“நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக்
 குறுங்கால் காஞ்சிக் கொம்பர் ஏறி”

-சிறுபா. 178-179


இச்சிறுபாணாற்றுப்படை அடிகளுக்கு நச்சினார்க்கினியர் பின்வருமாறு உரை கண்டுள்ளார்:

 

  1. ஒரு மரப் பெயரும் ஓரிசைப் பெயரும்
    கச்சிப்பதியும் கலையும் காஞ்சி-பிங். நி. 3343